×

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் கார்சியா - குவித்தோவா பைனலில் பலப்பரீட்சை

சின்சினாட்டி: அமெரிக்காவில் நடைபெறும் வெஸ்டர்ன் & சதர்ன் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், கரோலின் கார்சியா - பெத்ரா குவித்தோவா மோதுகின்றனர். அரையிறுதியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலெங்காவுடன் (24 வயது, 7வது ரேங்க்) மோதிய கார்சியா (பிரான்ஸ், 28 வயது, 35வது ரேங்க்) 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த சபலெங்கா 6-4 என கைப்பற்றி பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. எனினும், கடைசி செட்டில் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த கார்சியா 6-2, 4-6, 6-1 என்ற கணக்கில் 2 மணி, 5 நிமிடம் போராடி வென்று பைனலுக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் (27 வயது, 24வது ரேங்க்) சவாலை எதிர்கொண்ட செக் குடியரசு நட்சத்திரம் பெத்ரா குவித்தோவா (32 வயது, 28வது ரேங்க்) 6-7 (6-8), 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 18 நிமிடத்துக்கு நீடித்தது. சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் பைனலில் கார்சியா - குவித்தோவா மோதுகின்றனர்.

சிட்சிபாஸ் அசத்தல்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் நம்பர் 1 வீரர் டானில் மெத்வதேவுடன் (ரஷ்யா) மோதிய ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ், 7வது ரேங்க்) 7-6 (8-6), 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் குரோஷியாவின் போர்னா கோரிச் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் இங்கிலாந்தின் கேமரான் நோரியை வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் சிட்சிபாஸ் - போர்னா கை கலக்கின்றனர்.

Tags : Cincinnati Open Tennis ,Garcia ,Kvittova , Cincinnati Open Tennis, Garcia - Cvitova, Test in Final
× RELATED மயாமி ஓபன் டென்னிஸ்: ஒசாகாவை வீழ்த்தினார் கரோலின்