×

ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் இந்தியா: ஒயிட்வாஷ் தவிர்க்குமா ஜிம்பாப்வே?

ஹராரே: இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று பிற்பகல் 12.45க்கு தொடங்குகிறது. ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா, 2வது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. இந்த நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹராரேவில் இன்று நடைபெறுகிறது.

தொடர்ச்சியாக 3வது வெற்றியுடன் தொடரை முழுமையாகக் கைப்பற்றும் முனைப்புடன் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது. பந்துவீச்சில் தீபக் சாஹர், சிராஜ், குல்தீப், பிரசித், அக்சர், ஷர்துல் ஆகியோர் அமர்க்களப்படுத்தி வருகின்றனர். தவான், கில், ஹூடா, சாம்சன், அக்சர் நல்ல பார்மில் உள்ளனர். 2வது போட்டியில் கேப்டன் ராகுல் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தாலும், இன்று அவர் கணிசமாக ரன் குவிப்பார் என எதிர்பார்க்கலாம்.

அதே சமயம், ஜிம்பாப்வே முன்னணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுப்பதே அந்த அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்து வருகிறது. 2 போட்டியிலுமே அந்த அணி 31 ரன்னுக்கு முதல் 4 விக்கெட்டை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது. பலம் வாய்ந்த இந்திய அணிக்கு ஈடு கொடுப்பது இயலாத காரியம் என்பதை ஜிம்பாப்வே வீரர்கள் உணர்ந்துள்ள நிலையில், ஓரளவு கவுரவமாக தோற்க முயற்சிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

Tags : India ,Zimbabwe , Hat-trick win, India, whitewash, Zimbabwe
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!