×

சிறுவாபுரி முருகன் திருக்கோவில் கும்பாபிஷேகம்: அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்பு

சென்னை: சிறுவாபுரி முருகன் திருக்கோயில் கும்பாபிஷேகம் 19 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. சிறுவாபுரி முருகன் கோயிலில் கடந்த 2003ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதனையடுத்து சிறுவாபுரி முருகன் கோயிலில் ரூ..1கோடி ரூபாய் மதிப்பீட்டில்  புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஓரண்டாக இத்திருக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றன.

மூலவர் சன்னதி, அண்ணாமலையார் சன்னதி, விநாயகர் சன்னதி மற்றும் பரிவார சன்னதிகள், ராஜகோபுரம் ஆகியவை புதுப்பிக்கப்பட்டன. மதிற்சுவர் சீரமைத்தல், கருங்கல் தரைதளம் அமைத்தல்,பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்வசதி ஏற்படுத்துதல், கழிவறை சீரமைத்தல் என ஆலயத்தின் பல்வேறு திருப்பணிகள் சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் செய்து முடிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து 19ஆண்டுகளுக்கு பிறகு மஹா கும்பாபிஷேகம்  கடந்த 17ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலையில் 6ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்தன.

மேள தாளங்கள் முழங்க   சிவாச்சாரியார்கள் யாகசாலையில் இருந்து கலசங்களை கோயில் சுற்றி வலம் வந்து கொண்டு சென்று ராஜகோபுரம், மூலவர் சன்னதி, அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன், விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதிகளில் கலசங்களின் மீது புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடத்தி வைத்தனர்.
அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமை வகித்தார்.  பின்பு பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அப்போது கூடியிருந்த பெருந்திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன்,  ‘‘கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா’’ என எழுப்பிய கோஷம் விண்ணை எட்டியது. இதனையடுத்து பாலசுப்பிரமணிய சுவாமி, மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு, தீபதூப ஆராதனைகள் நடைபெற்றன.

இந்த கும்பாபிஷேக விழாவில்  ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பால்வளத் துறை அமைச்சர் ஆவடி.சாமு. நாசர், எம் எல்ஏக்கள் டி.ஜே.கோவிந்தராஜன், வி.ஜி.ராஜேந்திரன், துரை.சந்திரசேகர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு ஆலயத்தின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது.

Tags : Siruvapuri ,Murugan Temple ,Kumbabhishekam ,Charity Minister ,PK Shekharbabu , Siruvapuri Murugan Temple Kumbabhishekam, Charities Minister,
× RELATED யுகாதி பண்டிகையை முன்னிட்டு...