×

அடுத்த மாதம் ஷாங்காய் உச்சி மாநாடு; மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு? பாகிஸ்தான் பிரதமரும் பங்கேற்க வாய்ப்பு

புதுடெல்லி: அடுத்த மாதம் உஸ்பெகிஸ்தானில் ஷாங்காய் உச்சி மாநாடு நடைபெறுவதால், சீன, ரஷ்ய அதிபர்கள், இந்தியப் பிரதமர் மோடி ஆகியோர் சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்டில் வரும் செப்டம்பர் 15 மற்றும் 16ம் தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் இந்த அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்தியப் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்தியாவும் சீனாவும் தலைவர்கள் சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்தாண்டில் மட்டும் இதுவரை, இந்தியப் பிரதமர் மோடி, சர்வதேச மாநாடுகள் மற்றும் இருதரப்பு உறவுகளுக்காக பல நாடுகளுக்குச் சென்றுள்ளார். ஆனால் சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி முதல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஷாங்காய் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளாவிட்டாலும், காணொலி காட்சி மூலம் சீன அதிபர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

தைவான் விவகாரத்தில் அமெரிக்கா - சீனா இடையே பதற்றம், உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா - ரஷ்யா மற்றும் சீனா இடையே மோதல், இந்திய - சீன எல்லை விவகாரம் போன்றவை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் நிலையில், இந்த உச்சி மாநாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஷாங்காய் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டால், பிரதமர் மோடி அனைத்து உறுப்பினர்களையும் தனித்தனியாக சந்திக்க வாய்ப்புள்ளது. இந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் ஷாநவாஸ் ஷெரீப்பும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Shanghai Summit ,Modi ,Xi ,Jinping , Shanghai summit next month; Modi - Xi Jinping meeting? The Prime Minister of Pakistan is also expected to participate
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...