×

எடையூர் முதல் கோட்டகம் வரை ஜல்லி கற்கள் பெயர்ந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த எடையூர் கிழக்கு கடற்கரை சாலை வாண்டையார் பேருந்து நிறுத்தம் முதல் அனுமந்தன் கோட்டகம் வரையிலான சுமார் ஒரு கிலோ மீட்டர் சோத்திரியம் சாலை இப்பகுதி மக்களின் முக்கிய சாலையாகும். இந்த சாலை போட்டு சுமார் 12 வருடங்களுக்கு மேலாகிறது. இவ்வழியாக தான் எடையூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்லவேண்டும். குறிப்பாக பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள், அதேபோன்று சுற்று பகுதியை சேர்ந்த மக்கள் தொலைதூரம் செல்ல இவ்வழியாகதான் வந்து சங்கேந்தி கடைதெருவுக்கு வரவேண்டும். அதேபோல் அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளின் சாகுபடி வயலுக்கு இவ்வழியாக தான் செல்ல வேண்டும்.

இப்படி முக்கியத்துவமும் அவசியமும் வாய்ந்த இந்த சாலை தற்பொழுது தார் மற்றும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக பல்லாங்குழி போன்று காட்சியளிகிறது. இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் அனைத்து மக்களும் மிகப்பெரிய சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக வயதானவர்கள் அவசர சிகிச்சைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர்.

தற்போது இப்பகுதியில் பெய்த மழைக்கு சாலை மேலும் சேதமாகி இருப்பதுடன் சாலையோர நெடுவேங்கும் கருவை மரங்கள், அதேபோல் ஆங்காங்கே விஷசந்துக்கள் குடியிருக்கும் கரையான் புதர்கள் சாலையோரம் உள்ளது. இதனால் நடந்து செல்லும் மக்கள் அச்சம் ஏற்படுகிறது. அதேபோல் இரவு மட்டுமின்றி பகலிலும் பெண்கள் சிறுவர்கள் நடந்து செல்ல தயங்கி வருகின்றனர். அதனால் தற்போதை அரசும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு உடன் போர்கால அடிப்டையில் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Ediyur ,Fort , Repair of gravel road from Udaiyur to Kotakam: Public demand
× RELATED வரலாற்றுப் புகழ்பெற்ற ரஞ்சன்குடி...