×

சர்வேதேச சென்னை தினம்: பெசன்ட்நகர் 'எலியட்ஸ்'கடற்கரையில் கொண்டாட்டம்: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு

சென்னை: பல்வேறு நிலைகளில் சர்வதேச தரத்தில் சென்னை வளர்ச்சியடைந்துள்ள நிலையில் அதன் 383வது ஆண்டு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை தினத்தை கொண்டாடும் வகையில், எலியட்ஸ் கடற்கரையில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.தமிழகத்தில் கடைக்கோடி கிராமத்தில் இருந்து வருவோர் முதல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், மற்ற நாடுகளில் இருந்து பிழைப்பு தேடி வருவோரையும், சென்னை மாநகரம் அரவணைக்கிறது.மேலும், சர்வதேச கட்டமைப்புக்கு ஏற்ப, சென்னை மாநகரம் பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது.

இப்படி, பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய சென்னைக்கு மேலும் பெருமை சேர்த்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு சென்னை தினம் குறித்து பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியம்,பேச்சு, கட்டுரை என பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டது. புகைப்படம், குறும்படம் மற்றும் சோஷியல் மீடியா ரீல்ஸ் போட்டிகளும் நடத்தப்பட்டது. தொடர்ந்து, அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து சென்னை தினத்தை கொண்டாடும் வகையில், நம்ம சென்னை நம்ம பெருமை என்ற தலைப்பில், பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் கொண்டாடப்பட்டது.

இதில், இயற்கை விவசாய பொருட்கள், சிறுவர்களுக்கான கிராமிய விளையாட்டு, நச்சுத் தன்மை இல்லாத வீட்டு பொருட்கள், உணவு உள்ளிட்ட, 55 அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.சென்னையின் பாரம்பரியத்தை போற்றும் விதமாக நடத்தப்பட்ட கிராமிய கலைக்குழுவின் தப்பாட்டம், ஒயிலாட்டம் போன்றவை மக்களை கவர்ந்தன.

சென்னையின் கலாசாரம் மற்றும் பண்பாடு குறித்த கானா பாடல்களும் பாடப்பட்டு, பெருமை சேர்க்கப்பட்டது. இந்த கொண்டாட்டம், இரவு வரை தொடர்ந்தது.இன்றும் கடற்கரையில், பிற்பகல் 3:30 மணி முதல், இரவு 11:30 வரை, மாநகராட்சி சார்பில் சென்னை தினம் கொண்டாடப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளனர். மேலும், பூங்காக்களில் செல்பி பூத் அமைத்தும், சென்னை தினத்தை மாநகராட்சி கொண்டாடி வருகிறது.

நீளமான கடற்கரை, ரிப்பன் மாளிகை, அரசு பொது மருத்துவமனை, ரயில்வே அலுவலகம் என, சென்னை பழம் பெரும் வரலாற்றைக் கொண்டது.கடந்த ஆண்டுகளை விட, இந்த ஆண்டு சென்னை தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஐரோப்பிய நாட்டில் ஏதோ ஒரு நகரத்தில் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது என்று விழாவில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், இந்தியாவில் உள்ள நகரங்களில், சென்னை அமைதி நகரமாக திகழ்கிறது. அதிகாரிகள் சுதந்திரமாக பணிபுரியும் சூழல் உள்ளது. சட்டம் - ஒழுங்கு சிறப்பாக கையாளப்படுகிறது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் பிரியா, எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில்குமார் சி.சரத்கர், சி.ஐ.ஐ., நிறுவன தலைவர் சத்யகம் ஆர்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : International Chennai Day ,Besantnagar 'Elliots' Beach , International Chennai Day, Celebration at Besantnagar 'Elliot's' Beach, Large public participation
× RELATED பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் 400...