போலி நகைகளைக் கொடுத்து புதிய நகைகள் வாங்கி மோசடி; ஊர்க்காவல்படை வீரர் கைது; தலைமறைவான மனைவிக்கு வலை

சென்னை: மயிலாப்பூர் பஜார் பகுதியில் மகாலட்சுமி ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடையை ஜெயச்சந்திரன் (61) என்பவர் நடத்தி வருகிறார். கடந்த ஜூலை 18ம் தேதி இவரது கடைக்கு தனது கணவனுடன் சென்ற பெண், தன்னை ராணி என்ற பெயரில் அறிமுகம் செய்து, தன்னிடம் இருக்கும் பழைய நகைகளுக்கு மாறாக புதிய நகைகள் பெற வேண்டும் என்று கூறியுள்ளார். அவரிடமிருந்த 8.5 சவரன் பழைய நகைகளை பெற்றுக்கொண்ட ஜெயசந்திரன், அதற்கு  மாறாக 6 சவரன் புது நகைகளை அளித்துள்ளார். பழைய நகைக்குரிய தொகை போக மீதம் அளிக்க வேண்டிய தொகையை தான் ஒருவாரத்தில் அளிப்பதாக கூறி விட்டு  அப்பெண் சென்றுள்ளார்.

பின்னர் சில நாட்கள் கழித்து அப்பெண் வருவார்  வருவார் என ஆகஸ்ட் 18 வரை காத்திருந்த கடையின் உரிமையாளர் ஜெயசந்திரன், அவர் வராததால் ஒரு கட்டத்திற்கு மேல்  சந்தேகமடைந்தார்.

இதனையடுத்து அந்த பெண் அளித்த 8.5 சவரன் நகையை பரிசோதித்தபோது அவை கவரிங் என கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து நகைக்கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.சிசிடிவியில் பதிவாகி இருந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணின் மூலம் அவர்களின் வீட்டையடைந்த போலீசார் அவரது கணவரை நேற்று  கைது செய்தனர். விசாரணையில் மோசடியில் ஈடுபட்ட பெண், குன்றத்தூர் லட்சுமி நகரை சேர்ந்த ஊர்காவல் படையில் பணியாற்றும் மோகன்குமாரின்  மனைவி ஈஸ்வரி (36) என தெரிய வந்தது. நகையை ஏமாற்றி விட்டு தலைமறைவாக உள்ள  ஊர்காவல் படை வீரரின்  மனைவி குறித்து மயிலாப்பூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதோடு அப்பெண்ணை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Related Stories: