×

லக்னோவில் நிலநடுக்கம்

லக்னோ:  உத்தரப் பிரதேசத்தின் லக்னோ மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 5.2 புள்ளிகளாக பதிவானது. நேபாளத்தின் பக்ரைச் மாவட்டத்தை மையமாக கொண்டு 82 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகி இருந்ததாக புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லக்னோ மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பெரியளவில்  சேதங்கள் ஏற்படவில்லை.

வைஷ்ணவி தேவி கோயிலுக்கு பக்தர்கள் அனுமதி:  ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்கு பக்தர்களின் யாத்திரைக்கு நேற்று மீண்டும் அனுமதிக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள திரிகூட மலை உச்சியில் வைஷ்ணவி தேவி கோயில் அமைந்துள்ளது. இதற்கு பக்தர்கள் யாத்திரையாக சென்று தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது அங்கு பலத்த மழை பெய்து வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலில் இருந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மழை பெய்தது. இதனால், யாத்திரையை தொடர பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று காலை மழை ஓய்ந்த நிலையில் யாத்திரை மீண்டும் தொடங்கியது. கத்ராவின் தர்ஷனி தோடி அடிவார முகாமில் இருந்து 1,500 பக்தர்கள் பழைய வழிதடத்தில் யாத்திரைக்கு அனுமதிக்கப்பட்டனர்.  பல பக்தர்கள் தொடர் மழை காரணமாக தரிசனத்துக்கு செல்ல முடியாமல் அதிருப்தியோடு திரும்பி விட்டனர்.

மதுரா கோயிலில் நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் பலி: உத்தரப் பிரதேசத்தில் உள் மதுரா, கிருஷ்ணர் பிறந்த இடமாக கருதப்படுகிறது. இங்குள்ள கிருஷ்ணர் கோயிலில் ஆண்டுதோறும் கிருஷ்ணர் ஜெயந்தி கொண்டாட்டம் களைகட்டும். இங்குள்ள பிரபல பான்கே பிகாரி கோயிலில் நேற்று முன்தினம் கிருஷ்ணன் ஜெயந்தியை முன்னிட்டு, பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நள்ளிரவு 1.45 மணியளவில் சாமிக்கு ஆராதனை நடந்தபோது கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, ஏற்பட்ட நெரிசலில் சிக்கி நொய்டாவை சேர்ந்த 55 வயது  பெண்ணும், ஜபல்பூரை சேர்ந்த 65 வயது பெண்ணும் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Tags : Lucknow , Earthquake in Lucknow
× RELATED டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி