
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் நினைவிடத்துக்கு அடுத்த மாதம் 7ம்தேதி ராகுல் காந்தி வருகிறார் என்று செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவபடத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குமரி அனந்தன், திருநாவுக்கரசர், தங்கபாலு ஆகியோர் தலைமையில் காங்கிரசார் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, துணை தலைவர்கள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, தாமோதரன், கீழானூர் ராஜேந்திரன், எம்எல்ஏக்கள் ரூபி மனோகர், அசன் மவுலானா, மாவட்ட தலைவர்கள் சிவ ராஜசேகரன், நாஞ்சில் பிரசாத், முத்தழகன், ரஞ்சன் குமார், செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு, திருவான்மியூர் மனோகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது, செல்வப் பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:
மறைந்த பிரதமர் ராஜிவ்காந்தியின் ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்துக்கு 31 ஆண்டுகள் கழித்து ராகுல்காந்தி அடுத்த மாதம் 7ம்தேதி காலை வருகை தர உள்ளார். இதற்காக 6ம்தேதி இரவு சென்னை வரும் அவருக்கு காங்கிரசார் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதை தொடர்ந்து, கன்னியாகுமரி புறப்பட்டு செல்லும் அவர் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை தொடங்குகிறார். 7ம் தேதி இரவு கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். தமிழகத்தில் 4 நாட்கள் 59 கி.மீ., நடக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை தமிழக காங்கிரஸ் செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.