×

நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பால பணி தொடங்கப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் பணி தொடங்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் நாள் ஒன்றுக்கு 15 முதல் 20 தடவைக்கு மேல் ரயில்வே கேட் போடப்படுகிறது. இதனால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு காலை சென்னை-மன்னை, கோவை-மன்னை, வாரத்தில் 3 நாட்கள் இயங்கும் திருப்பதி-மன்னார்குடி, வாரம் ஒருநாள் இயக்கப்படும் பகத் கி ஹோதி (டெல்லி-மன்னை), எர்ணாகுளம்-காரைக்கால், எர்ணாகுளம்-வேளாங்கண்ணி உள்ளிட்ட பல விரைவு ரயில்களும், காலை மன்னை-மானாமதுரை, மன்னை-மயிலாடுதுறை, திருச்சி-நாகூர், திருச்சி-வேளாங்கண்ணி உள்ளிட்ட பயணிகள் ரயில் தினந்தோறும் சென்று வருகிறது.அதுமட்டுமல்லாமல் தினந்தோறும் நிலக்கரி ஏற்றிக்கொண்டு பல சரக்கு ரயில் செல்கிறது. மேலும் நீடாமங்கலம், மன்னார்குடி தாலுக்கா பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு மையங்களிலிருந்து கொண்டு வரப்படும் நெல் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு அரவைக்கு ரயில் பெட்டிகளில் அனுப்பப்படுகிறது.

மேலும் பொது விநியோக திட்டத்திற்கும் அரிசி மூட்டைகள் ரயில் பெட்டிகளில் அனுப்பப்படுகிறது. மேலும் வெளியூர்களிலிருந்து தனியார் சிமெண்ட் கம்பெனிகளிலிருந்து சிமெண்ட் மூட்டைகள் ரயில் வேகனில் இறக்கப்பட்டு செல்கிறது. இதன் காரணமாக ரயில் கேட் மூடப்படும் நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். பலதடவை இந்த ரயில்வே கேட்டால் அவசர சிகிச்சைக்கு திருவாரூரிலிருந்து தஞ்சாவூருக்கு ஆம்புலன்ஸில் நோயாளிகளை ஏற்றிச்செல்லும்போது ரயில்வே கேட் மூடப்பட்டுள்ளதால் நோயாளிகள் இறந்து வீட்டிற்கு திரும்ப கொண்டு சென்ற சம்பவங்களும் உண்டு. பேரிடர் காலத்தில் அவசரத்திற்கு செல்லும் தீயணைப்பு வாகனமும் இந்த ரயில்வே கேட்டில் மாட்டியதும் உண்டு. நீடாமங்கலத்தில் ரயில்வே கேட்டால் நேர்முக தேர்வுக்கு வாகனங்களில் சென்ற மாணவ, மாணவிகள் கேட்டில் மாட்டி காலதாமதம் ஏற்பட்டு வீடு திரும்பியுள்ளனர்.இதனால் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்ளிலிருந்து சுற்றுலா தலத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகளும் நீடாமங்கலத்தில் போடப்படும் ரயில்வே கேட்டில் நீண்டநேரமாக காத்துக்கிடக்கும் அவலம் இருந்து வருகிறது.

இதனால் நீடாமங்கலம் ரயில்வே கேட்டிற்கு பெருமை என ஏளனமாக பேசுபவர்களும் உண்டு. எனவே நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வர்த்தகர்கள், வணிகர்கள், பொது அமைப்புகள், அரசியல் அமைப்புகள் விடுத்த கோரிக்கை, போராட்டத்தால் மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது (கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்) மக்கள் கோரிக்கையை ஏற்று சட்டசபையில் 110 விதியின்கீழ் நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டப்படும் என அறிவித்தார். இதனால் மக்கள் மகிழ்ச்சியயாக இருந்தனர். அதற்கான நில அளவை பணிகள் தொடங்கி பின்னர் நின்றுபோனது. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டுவது பற்றி கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்டு விட்டார். தற்போது ஆட்சிக்கு வந்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜாவின் கோரிக்கையை ஏற்று நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்படும் என அறிவித்தார். அதற்கான ஒரு நிதியும் ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது அந்த பணி எந்த நிலையில் உள்ளது என தெரியவில்லை.எனவே தமிழக முதல்வர் நீடாமங்கலம் பகுதி மக்கள் நலன் கருதியும், வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், ஆன்மிக தலங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் நலன் கருதியும் நீடாமங்கலத்தில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி எப்போது தொடங்கப்படும்? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags : Needamangalam , Railway flyover work to be started at Needamangalam?: Public expectation
× RELATED கோடை நடவு பயிரில் எலிகளை கட்டுப்படுத்த பறவை தாங்கி