ஆபத்தை உணராமல் விபரீதம் பாலத்தின் மேல் இருந்து கல்லணை கால்வாயில் குதிக்கும் வாலிபர்கள்: கண்காணித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருக்காட்டுப்பள்ளி: கல்லணைக் கால்வாயில் ஆபத்தை உணராமல் பாலத்தின் மேலிருந்து குதித்து குளிக்கும் வாலிபர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருக்காட்டுப்பள்ளி அருகே சுற்றுலா தலமாக விளங்கும் கரிகாலன் கட்டிய கல்லணையில் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய பிரிவு ஆறுகள் செல்கிறது. இந்த ஆறுகளில் விவசாயத்திற்கு மட்டும் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகிய ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. கடந்த வாரங்களில் கர்நாடகாவில் பெய்த கனமழையின் காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்ததாலும் அங்குள்ள அணைகள் நிரம்பி உபரிநீராக இரண்டு லட்சம் கன அடிக்கும் மேலாக மேட்டூருக்கு வந்தது. மேட்டூரிலிருந்து திறக்கப்பட்ட மழை நீர் முக்கொம்பு வழியாக காவிரியிலும், நேரடியாக கொள்ளிடத்திலும் திறக்கப்பட்டு சென்றது.

இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வெள்ளம் பாதித்த பகுதியில் உள்ள மக்களை அரசு மாவட்ட நிர்வாகம் மூலம் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. தற்போது . கொள்ளிடத்தில் வெள்ள நீர் வடிந்து வெறுமையாக காணப்படுகிறது.

ஆனால் விவசாயத்திற்காக நேற்று மாலை 4 மணி நிலவரப்படி காவிரியில் 24 02 கன அடி தண்ணீரும், வெண்ணாறில் 9005 கன அடி தண்ணீரும், கல்லணைக் கால்வாயில் 32 21 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டு செல்கிறது. இந்நிலையில் கல்லணைக் கால்வாயில் வாலிபர்கள் ஆபத்தை உணராமல் பாலத்தின் மேலிருந்து குதித்து குளிக்கின்றனர். இதனால் ஏதும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் சுற்றுலா பயணிகளும் தெரிவித்தனர்.

Related Stories: