×

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் காலிறுதியில் மேடிசன் கீஸ்: இகா, எம்மா அதிர்ச்சி தோல்வி

சின்சினாட்டி: அமெரிக்காவில் நடைபெறும் வெஸ்டர்ன் மற்றும் சதர்ன் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, உள்ளூர் நட்சத்திரம் மேடிசன் கீஸ் தகுதி பெற்றார். மூன்றாவது சுற்றில் நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக்குடன் (21 வயது, போலந்து) மோதிய மேடிசன்  கீஸ் (27 வயது, 24வது ரேங்க்) 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 25 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. நம்பர் 1 வீராங்கனையை கீஸ் வென்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.

மற்றொரு 3வது சுற்றில் இங்கிலாந்தின் இளம் வீராங்கனை எம்மா ரடுகானு (19 வயது, 13வது ரேங்க்) அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலாவிடம் (28 வயது, 8வது ரேங்க்) 5-7, 4-6 என்ற நேர் செட்களில் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். இந்த தொடரில் 2வது நிலை அந்தஸ்துடன் களமிறங்கிய அனெட் கோன்டவெய்ட்டும் (எஸ்டோனியா) 6-2, 4-6, 4-6 என்ற செட் கணக்கில் சீனாவின் சுவாய் ஸாங்கிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. முன்னணி வீராங்கனைகள் அரினா சபலெங்கா (பெலாரஸ்), அய்லா டம்யானோவிச் (ஆஸி.), கரோலின் கார்சியா (பிரான்ஸ்), பெத்ரா குவித்தோவா (செக் குடியரசு), எலனா ரைபாகினா (கஜகஸ்தான்) ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

மெத்வதேவ் முன்னேற்றம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட நம்பர் 1 வீரர் டானில் மெத்வதேவ் (ரஷ்யா) தகுதி பெற்றுள்ளார். 3வது சுற்றில் கனடாவின் டெனிஸ் ஷபோவலாவுடன் மோதிய மெத்வதேவ் 7-5, 7-5 என்ற நேர் செட்களில் வென்றார். கார்லோஸ் அல்கரஸ் (ஸ்பெயின்), ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்), கேமரான் நோரி (இங்கிலாந்து), போர்னா சோரிச் (குரோஷியா) ஜான் ஐஸ்னர் ஆகியோர் காலிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், நட்சத்திர வீரர்கள் மரின் சிலிச் (குரோஷியா), ஆந்த்ரே ருப்லேவ் (ரஷ்யா), யானிக் சின்னர் (இத்தாலி), பாடிஸ்டா அகுத் (ஸ்பெயின்), டீகோ ஷ்வார்ட்ஸ்மேன் (அர்ஜென்டினா) ஆகியோர் 3வது சுற்றுடன் வெளியேறினர். மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா - லூசி ராடெக்கா (செக்.) இணை 2-6, 4-6 என்ற நேர் செட்களில் கிச்சனோக் (உக்ரைன்) - ஓஸ்டபென்கோ (லாட்வியா) ஜோடியிடம் தோல்வியைத் தழுவியது.

Tags : Madison ,Iga ,Emma ,Cincinnati Open , Madison Keys: Iga, Emma shock defeat in Cincinnati Open tennis quarterfinals
× RELATED மயாமி ஓபன் டென்னிஸ் காலிறுதியில் எலனா ரைபாகினா