×

சிவகிரியில் தொடர் கொள்ளையால் பாழாகும் வழிவழி குளம்: தென்காசி மாவட்ட குளங்களில் மண் அள்ள நிரந்தர தடை விதிக்கப்படுமா?

சிவகிரி: சிவகிரி வழிவழி குளத்தில் நிலவும் மண் கொள்ளையை தடுத்துநிறுத்த குளத்து மண்ணை அள்ள தென்காசி மாவட்ட நிர்வாகம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், நிரந்தரத் தடை விதிக்கப்படுமா? என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர். தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டாரத்தில் நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் இயங்கி வருகின்றன.

சிவகிரியைப் பொருத்தவரை நாரணபுரம், திருமலாபுரம்  ஆகிய கிராமங்களில் தலா ஒரு செங்கல் சூளை என இரு செங்கல் சூளைகள் மட்டுமே அரசு அனுமதி பெற்றுள்ள நிலையில் மற்ற அனைத்தும் சட்டவிரோதமாகச் செயல்படுகின்றன. இத்தகைய நிலையில் வேளாண் பயன்பாட்டிற்கும், மண் பாண்ட உற்பத்திக்கும் குறிப்பிட்ட ஒரு சில குளங்களில் மட்டும் மண் அள்ளிக்கொள்ள கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரசு வழிகாட்டுதலின்படி மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. ஆனால், சிவகிரி பகுதியில் சட்டத்திற்குப் புறம்பாக செங்கள் சூளை நடத்துவோர், இதை தங்களுக்குச் சாதகமாக தவறாகப் பயன்படுத்தத் தொடங்கினர்.  

குறிப்பாக இயற்கை எழில் கொஞ்சும் சிவகிரி பகுதியில் உள்ள வழிவழி குளத்தில், நவீன இயந்திரங்கள் மூலம்  மண்ணை தோண்டி அள்ளி கனரக வாகனங்கள், நூற்றுக்கணக்கான டிராக்டர்களில் கடத்திச்செல்கின்றனர். இதற்காக குளத்தின் கரைகளிலும், உட்புறத்திலும் வளர்ந்து நின்ற நூற்றுக்கணக்கான பனைகள் உள்ளிட்ட மரங்களை வெட்டிச் சாய்த்து இயற்கை வளங்களை அழித்துவருகின்றனர். எனவே, இவ்வாறு சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், சட்ட விரோத செங்கல் சூளைகளை உடனடியாக அகற்றவும், குளத்து மண் கொள்ளையை தடுக்க குளங்களில் மண் அளிக்க நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், விவசாயிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் இதுபோன்ற குளத்து மண் கொள்ளையை தடுத்துநிறுத்தக் கோரி சிவகிரியைச் சேர்ந்த மாரித்துரை என்பர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுத்தார். சிவகிரி  வடக்கு ரத வீதியைச் சேர்ந்த ராமசாமி என்பவரும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் புகார் அளித்தார். இதையடுத்து கள ஆய்வு நடத்திய நெல்லை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்  சுயம்பு தங்கராணி, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சிவகிரி தாசில்தாருக்கும், நெல்லை புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநருக்கும் உத்தரவிட்டபோதும் சிவகிரி பகுதியில் உள்ள வழிவழி குளத்தில் நிலவும் மண் கொள்ளை முடிவுக்கு வரவில்லை.

இந்நிலையில் இதுகுறித்த அவசர ஆலோசனை கூட்டம் தென்காசி கலெக்டர் ஆகாஷ்  தலைமையில் நடந்தது.  இதில் தென்மண்டல ஐஜி அஸ்ரா கர்க், டிஆர்ஓ ஜெயினுலாப்தீன், எஸ்பி கிருஷ்ணராஜ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் தென்காசி மாவட்டத்தில் மண் கொள்ளையை தடுக்கும்பொருட்டு குளங்களில் மண் அள்ள கலெக்டர் ஆகாஷ் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தார். இருப்பினும் நிரந்தரத் தடை விதிக்கப்படுமா? என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர். அத்துடன் அனுமதியின்றி சட்ட விரோதமாகச் செயல்பட்டு வரும் நூற்றுக்கணக்கான செங்கள் சூளைகளையும் நிரந்தரமாக இழுத்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடரும் விபத்துகள்
தென்காசி மாவட்டத்தில்  சட்டவிரோதமாக செயல்படும் செங்கல் சூளைகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான  வாகனங்கள் சென்றுவருகின்றன. இவற்றில் பெரும்பாலான வாகனங்களை ஓட்டுநர்  உரிமம்கூட பெறாத இளைஞர்கள் அசுர வேகத்தில்  இயக்குவதால்  விபத்துகள்  தொடர்கதையாகி உள்ளன. இதனால் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர்  படுகாயம் அடைந்து நிரந்தர மாற்றுத்திறனாளிகள் ஆகி வருவதாக பொதுமக்கள்  குற்றம் சாட்டுகின்றனர்.

Tags : Sivagiri pond ,Tenkasi , Continued looting, permanent ban on silting in ponds
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...