×

திருவண்ணாமலை- வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக அமைத்த சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல்: முன்னறிவிப்பின்றி சோதனை ஓட்டம் தொடங்கியது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை- வேலூர் தேசிய நெடுஞ்சாலையில், விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பதற்கான சோதனை ஓட்டம் தொடங்கியதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தின் மிக முக்கியமான தேசிய நெடுஞ்சாலைகளில், சி-சி ரோடு எனப்படும் சித்தூர்- கடலூர் சாலை குறிப்பிடத்தக்கது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களை இணைக்கும் இச்சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதால், இந்த சாலையை தரம் உயர்த்த வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை.

ஆனால், திருவண்ணாமலை- வேலூர் இடையேயான தேசிய நெடுஞ்சாலையை தரம் உயர்த்தவில்லை. இருவழிச்சாலையாக மாற்றவில்லை. ஆனால், திருவண்ணாமலையில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ள இனாம்காரியந்தல் கிராமத்தில் சுங்கச்சாவடியை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசு அமைத்தது. எந்த விதித்திலும் சுங்கச்சாவடி அமைக்க தகுதியில்லாத சாலையில், சுங்கச்சாவடி அமைத்ததற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், எதிர்ப்பையும் மீறி ஒன்றிய அரசு சுங்கச்சாவடி அமைத்தது. அதை, அப்போதய அதிமுக அரசு தடுத்து நிறுத்தவும் இல்லை. அதோடு, இந்த சுங்கச்சாவடியில் இடிபாடுகள் இல்லாமல் கனரக வாகனம் கடந்து செல்ல முடியாத அளவில், மிகவும் குறுகலான கட்டமைப்புடன் அமைந்திருக்கிறது. அதனால், பயன்பாட்டுக்கு வரும் முன்பே பல்வேறு விபத்துக்கள் அந்த இடத்தில் தொடர்ந்து நடந்தன.

இந்நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், அவசர அவசரமாக சுங்கச்சாவடியை ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறது. அதையொட்டி, கடந்த 2 நாட்களாக சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. மேலும், சுங்கச்சாவடி கட்டணம் குறித்த எந்த அறிவிப்பு பலகையும் முறையாக அமைக்கவில்லை. கட்டணம் வசூலிக்கும் அறையில் மட்டுமே கட்டண விபர விளம்பர பதாகையை வைத்துள்ளனர்.

மேலும், கார், ஜீப், வேன் ஆகியவை ஒருமுறை கடந்து செல்ல ₹35, ஒரே நாளில் இருமுறை கடந்து செல்ல ₹50, வாடகை வாகனங்களுக்கு ஒருமுறை ₹55, இருமுறை கடந்து செல்ல ₹80, பஸ், லாரிகளுக்கு ₹110, இருமுறை கடந்து செல்ல ₹165 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மேலும், அதி கனரக வாகனங்களுக்கு ₹120 முதல் 210 வரை ஒருமுறை கட்டணமாக நிர்ணயித்துள்ளனர். அதனால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர்.

சோதனை ஓட்டம் தொடங்கிய முதல் நாளன்று, கட்டணமில்லை என தெரிவித்து, பரிசோதிப்பதாக மட்டுமே தெரிவித்தனர். ஆனால், நேற்று முன்தினம் இரவு முதல் கட்டணம் வசூலிக்க தொடங்கிவிட்டனர். இந்த சுங்கச்சாவடியை கடந்து செல்லும் வாகனங்களின் ‘பாஸ்டேக்’ மூலம் கட்டணம் எடுப்பதால், சில மணி நேரம் கழித்த பிறகே அதற்கான `எஸ்எம்எஸ்’ வருகிறது.தரமற்ற சாலையில், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை சுங்கச்சாவடி கட்டணத்தை வசூலிப்பதை கைவிட வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

மேலும், தமிழகத்தில் மட்டும் 6,634 கிமீ தேசிய நெடுஞ்சாலை உள்ளன. எனவே, அதிகபட்சமாக 16 இடங்களில் மட்டும்தான் சுங்கச்சாவடி அமைந்திருக்க வேண்டும். ஆனால், 48 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைந்திருக்கிறது. எனவே, கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள 32 சுங்கச்சாவடிகளை அகற்ற தமிழக நெடுஞ்சாலைத்துறை ஏற்கனவே ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், திருவண்ணாமலை அருகே சுங்கக்கட்டணம் வசூலிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கிரிவல பக்தர்களுக்கு கூடுதல் சுமை
திருவண்ணாமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலத்துக்காக வருகின்றனர். அதோடு, தினமும் அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக, ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம்.
அதேபோல், திருவண்ணாமலை- வேலூர் சாலை வழியாகவும், ஆரணி, ஆற்காடு, காஞ்சிபுரம் வழியாகவும் திருவண்ணாமலை வரும் பக்தர்கள் இந்த சாலையைத்தான் பயன்படுத்த வேண்டும். அதேபோல், தென் மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலை வழியாக திருப்பதி செல்லும் பக்தர்களும் இந்த சாலையை கடந்து செல்ல வேண்டும். எனவே, திருவண்ணாமலை மற்றும் திருப்பதி செல்லும் பக்தர்கள், 2 சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் செலுத்துவது கூடுதல் சுமையாக அமையும்.

நகராட்சி எல்லையில் இருந்து 4 கிமீ தூரத்தில் சுங்கச்சாவடியா?
மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லையில் இருந்த 10 கிமீ தொலைவுக்குள் சுங்கச்சாவடி அமைக்கக்கூடாது என்ற விதிமுறையை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த 2008ம் ஆண்டு அறிவித்திருக்கிறது. ஆனால், அந்த விதிமுறைக்கு மாறாக திருவண்ணாமலை நகராட்சியில் இருந்து 5 கிமீ தொலைவுக்குள் இந்த சுங்கச்சாவடி அமைத்துள்ளனர். அதோடு, திருவண்ணாமலை- வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் 60 கிமீ இடைவெளியில் திருவண்ணாமலை அடுத்த இனாம்காரியந்தல் கிராமத்துக்கு அருகிலும், கண்ணமங்கலம் அடுத்த கனவாய்மேடு அருகிலும் என 2  இடங்களில் சுங்கச்சாவடிகளை ஒன்றிய அரசு எப்படி அமைக்க அனுமதித்தது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

மேலும், மாநகராட்சி, நகராட்சி எல்லையில் இருந்து 10 கிமீ தொலைவுக்குள் அமைந்துள்ள, பெங்களூர் சாலையில் சென்னசமுத்திரம், நெமிலி மற்றும் சென்னை வானகரம், சூரப்பட்டு, பரனூர் ஆகிய 5 இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என தமிழக அரசின் சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ஏற்கனவே ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியுள்ளார். எனவே, இந்த சுங்கச்சாவடியையும் தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Tiruvannamalai- Vellore National Highway , Toll Collection at Tiruvannamalai, National Highway, Tollbooth,
× RELATED திருவண்ணாமலை- வேலூர் தேசிய...