×

தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு, காஷ்மீரில் தற்காலிகமாக தங்கி இருப்பவர்களுக்கும் வாக்குரிமை; எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

ஸ்ரீ நகர்: ஜம்மு காஷ்மீரில் தற்காலிகமாக குடியிருப்பவர்களும் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் திடீரென அறிவித்துள்ளது. இதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. தொகுதி எல்லை வரையறை முடிந்ததை தொடர்ந்து, அங்கு சட்டப்பேரவை தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. இதை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் தற்காலிகமாக குடியிருப்பவர்களும் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் நேற்று திடீரென அறிவித்தது. காஷ்மீரில் வேலை செய்யும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள், ஊழியர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் என ஜம்மு காஷ்மீரை சாராதவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அது அழைப்பு விடுத்துள்ளது. இதன் காரணமாக, ஜம்மு காஷ்மீரில் தற்காலிகமாக குடியிருக்கும் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாக்காளர் பட்டியலில் கூடுதலாக சேர்க்கப்படுவார்கள் என தெரிகிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
 
முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறுகையில்,‘ஜம்மு காஷ்மீர் மக்கள் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதற்காக, வெளிமாநில வாக்காளர்களை பாஜ இறக்குமதி செய்கிறதா? இது, பாஜ வெற்றி பெற உதவாது,”என்றார். முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கூறுகையில்,‘ஜம்மு காஷ்மீரை தொடர்ந்து ஆள வேண்டும் என்பதற்கான பாஜ செய்யும் தந்திரம்தான் இது,’என்று விமர்சித்துள்ளார். மேலும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரான பரூக் அப்துல்லா, இது பற்றி விவாதிப்பதற்காக வரும் 22ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.


Tags : Election Commission ,Kashmir , Election Commission's sudden announcement, right to vote for those temporarily staying in Kashmir; Opposition parties strongly opposed
× RELATED வாக்குச்சாவடி மையத்தின் அருகில்...