×

இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் மறைவு; அரசியல் தலைவர்கள் இரங்கல்

சென்னை: இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ் இலக்கிய பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான,‘தமிழ்க்கடல்’நெல்லை கண்ணன் (77), திருநெல்வேலியில் உள்ள இல்லத்தில், வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருடைய மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், இலக்கிய மற்றும் சினிமா பிரபலங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர். கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்): ‘‘தமிழறிஞரும், மிகச் சிறந்த சொற்பொழிவாளருமான நெல்லை கண்ணன் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். காமராஜர் மீது பற்று கொண்டு காங்கிரஸ் இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டவர். மகாகவி பாரதியார், காமராஜர், கவியரசர் கண்ணதாசன் ஆகியோரை பற்றி நெல்லை கண்ணன் ஆற்றிய சொற்பொழிவுகள் தமிழக மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை எவரும் மறந்திட இயலாது. இலக்கிய பட்டிமன்ற நடுவராக பொறுப்பேற்று கூறிய கருத்துகள் மிக ஆழமானவை, சிந்திக்கக் கூடியவை. அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

கி.வீரமணி (திராவிடர் கழக தலைவர்): தமிழ்நாடு ஒரு சிறந்த இலக்கிய  திறனாய்வாளரை இழந்தது. அவரது இடத்தை எவரும் எளிதில் நிரப்ப இயலாது. அவரைப்  பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த  இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): செம்மொழியாம் தமிழ் முழக்கம் செய்து வந்த நெல்லைக் கண்ணனின் இழப்பை, இலக்கிய உலகம் எளிதில் ஈடுசெய்ய இயலாது. இலக்கிய தளத்தில் மட்டுமல்ல அரசியல் களத்தில் காமராஜரின் தலைமை ஏற்று, சுழன்று, சுழன்று பரப்புரை செய்த முன்னணி தலைவர். நெல்லை கண்ணன் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): கம்பராமாயணம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை கொண்ட நெல்லை கண்ணன் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கிய மேடைகளில் சொற்பொழிவாளராகவும், பட்டிமன்ற நடுவராகவும் திகழ்ந்தவர். தமிழக அரசு சமீபத்தில் இவருக்கு இளங்கோ அடிகள் விருது கொடுத்து கவுரவித்தது. இந்த விருது உள்படட பல விருதுகளை பெற்ற அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும்.

ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): நெல்லை கண்ணன் சிறந்த பேச்சாளராகவும், பட்டிமன்ற தலை வராகவும், இலக்கியவாதியாகவும் திகழ்ந்தவர். அவர் தனது சிறுவயது முதல் காமராஜரால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர். சிறந்த தேசியவாதி. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். டிடிவி.தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்): தமிழறிஞரும் தலைசிறந்த சொற்பொழிவாளருமான நெல்லை கண்ணன் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தமிழ்ப் பணியும் சமூகப் பணியும் என்றைக்கும் நிலைத்து நிற்கும். இதேபோல், காங். மூத்த தலைவர் திருநாவுக்கரசர், சமக தலைவர் சரத்குமார், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags : Nellah Kannan , Literary speaker Nellai Kannan passed away; Political leaders condole
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...