காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் பங்கேற்க சபாநாயகர் அப்பாவு கனடா பயணம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக சபாநாயகர் அப்பாவு நேற்று கனடா நாட்டுக்கு செல்கிறார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வருகிற 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை கனடா நாட்டின் ஹாலிபேக்ஸ் நகரில் நடைபெறவிருக்கும் 65வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் தமிழக கிளையின் பிரதிநிதியாக பேரவை தலைவர் மு.அப்பாவு கலந்து கொள்கிறார். சட்டமன்ற செயலாளர் சீனிவாசனும் இந்த மாநாட்டில் நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொள்கிறார்.

பேரவை தலைவரும், செயலாளரும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று (18ம் தேதி) இரவு 9.45 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் சென்று அங்கிருந்து சான் பிரான்சிஸ்கோ நகருக்கு ஆய்வு பயணம் மேற்கொண்டு, பின்பு ஹாலிபேக்ஸ் நகருக்கு செல்கின்றனர். மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு செப்டம்பர் 1ம் தேதி இரவு 8.30 மணியளவில் எமிரேட்ஸ் விமானம் மூலம் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு சென்னை திரும்புகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவை சந்தித்து, 65வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் தமிழக கிளையின் பிரதிநிதியாக கலந்துகொள்வதையொட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

Related Stories: