திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக் காற்றுடன் கன மழை: மரங்கள், பேனர்கள் விழுந்து 2 பேர் படுகாயம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததில் மரங்கள், பேனர்கள் விழுந்தன. பேனர் விழுந்ததில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது. இதன்காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே மரங்கள் சாய்ந்துவிழுந்தன. அரசியல் கட்சி பேனர்கள், விளம்பர பேனர்கள் அனைத்தும் காற்றில் பறந்துசென்றன.

திருவள்ளூர் நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நகராட்சிக்கு உட்பட்ட மணவாளநகர், ஜே.என்.சாலை பூங்கா நகர், பெரியார் நகர், காமராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துவிழுந்தன. ஒரு சில இடங்களில் மரக் கிளைகள் முறிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அரசியல் கட்சி பேனர்கள் சூறாவளி காற்றில் அறுந்து விழுந்ததில் இரண்டு பேர் காயம் அடைந்தனர்.

திருவள்ளூர் நகராட்சி ஆணையர் க.ராஜலட்சுமி உத்தரவின்படி, சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜ், சுகாதார அலுவலர் சுதர்சன் மற்றும் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு சாலையில் விழுந்து கிடந்த மரங்களை வெட்டி உடனடியாக அப்புறப்படுத்தினர். இனிவரும் காலங்களில் நகராட்சி நிர்வாகம் அனுமதியின்றி விளம்பர போர்டுகளை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று நகராட்சி ஆணையர் க.ராஜலட்சுமி எச்சரித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் நள்ளிரவில் திருவள்ளூரில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. பூந்தமல்லி 4 செ.மீ, ஜமீன்கொரட்டூர், பள்ளிப்பட்டு தலா 3 செ.மீ. பூண்டி, ஆவடியில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Related Stories: