×

வடபழனி நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளை எஸ்ஐ தேர்வுக்கு படித்து வந்த பட்டதாரி உள்பட 2 பேர் சரண்

சென்னை: வடபழனி நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம் பணம் கொள்ளையடித்த வழக்கில் தலைமறைவாக இருந்த எஸ்ஐ தேர்வுக்கு படித்து வந்த பட்டதாரி உள்பட 2 பேர் திருவள்ளூர் நீதிமனறத்தில் சரணடைந்தனர். சென்னை வடபழனியை சேர்ந்த சரவணன் (44), நண்பர்கள் 9 பேருடன் ‘ஓசானிக் கேபிடல்’ என்ற பெயரில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் இரு தினங்களுக்கு முன் புகுந்த 7 பேர் கொண்ட முகமூடி கொள்ளை கும்பல் ஊழியர்கள் தீபக் மற்றும் நவீன்குமாரை கத்தி முனையில் மிரட்டி ரூ.30 லட்சம் பணத்தை அள்ளி சென்றனர். கொள்ளையர்களில் ஒருவரான கல்லூரி மாணவன் ரியாஷ் பாஷா (22) தப்பி ஓடியபோது பொதுமக்கள் உதவியுடன் சரவணன் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.

அவர் அளித்த தகவலின்படி, முக்கிய குற்றவாளி மொட்டை (28) மற்றும் நணபர்களான ஜானி (22), இஸ்மாயில் (21), பரத் (23), கிஷோர் கண்ணன் (23), தமிழ்செல்வன் (21), பரத் ஆகியோரை 5 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் கிஷோர் கண்ணன், தனது கல்லூரியில் பிபிஏ படித்த நண்பரை சந்தித்துள்ளார். அப்போது கையில் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை தனது தாயிடம் கொடுக்க சொல்லி கூறிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். ஏற்கனவே குற்றவாளிகளின் பெற்றோர் மற்றும் உடன் படித்து வரும் நணர்களிடம் தனிப்படை போலீசார் கிஷோர் கண்ணன் குறித்து தகவல் தெரிந்தால் தெரிவிக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

அதன்படி கிஷோர் கண்ணனுடன் படிக்கும் நண்பர் ரூ.2 லட்சத்தை கிஷோர் கண்ணன் கொடுத்துவிட்டு சென்ற சம்பவத்தை போலீசாரிடம் தெரிவித்தார். அதன்படி போலீசார் நண்பரிடம் சென்று ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். போலீசார் தங்களை நெருங்கிவிட்டதாக அறிந்த கிஷோர் கண்ணன் மற்றும் தனியார் கல்லூரியில் பிசிஏ முடித்துவிட்டு தற்போது காவல்துறையில் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு படித்து வரும் தமிழ்செல்வன் (21) ஆகியோர் வேறு வழியின்றி நேற்று திருவள்ளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

அப்போது, ‘கொள்ளை வழக்கில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. இஸ்மாயில் என்பவர் எங்களுக்கு ஒருவர் பணம் தர வேண்டும். அவரிடம் கேட்க போகலாம் என அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு இஸ்மாயில் உள்ளிட்டோர் நிதி நிறுவனத்தில் கொள்ளையடித்தனர். எங்கள் மீது இதுவரை எந்த காவல் நிலையத்திலும் வழக்குகளும் இல்லை’’ என கூறியுள்ளனர். பின்னர் மாஜிஸ்திரேட் சத்யநாராயணன் இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவான இஸ்மாயில் மொட்டை, ஜானி, பரத் ஆகியோரை பிடிக்க தனிப்படை புதுச்சேரி விரைந்துள்ளது.

Tags : Vadapalani Finance Company , 2 people, including a graduate who was studying for the SI exam, stole Rs 30 lakh from Vadapalani Finance Company.
× RELATED வடபழனி நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம்...