17 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன காஞ்சி புத்தர் சிலை அமெரிக்காவில் இருக்கிறது: கிராம மக்கள் மகிழ்ச்சி

சென்னை: காஞ்சிபுரம் அருகே 17 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன புத்தர் சிலை, அமெரிக்காவில் இருப்பதாக வெளியான தகவலால், கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காஞ்சிபுரத்தை அடுத்த ஆர்ப்பாக்கம் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன், விஷ்ணு, ஜெயின் ஆலயங்களும், பவுத்த ஆலயங்களும், சிலைகளும் உள்ளது. இந்நிலையில் இங்குள்ள ஆதி கேசவபெருமாள் கோயிலையொட்டி, அமர்ந்த, நின்ற மற்றும் சிதலமடைந்த மூன்று கிரானைட் புத்தர் சிலைகள் இருந்துள்ளது. அதனை அதே கிராமத்தைச் சேர்ந்த மறைந்த புலவர் ராஜகோபால் என்பவர் பராமரித்தும், இதுகுறித்த சில நூல்களையும், தகவல்களையும் ஆவணப்படுத்தி உள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டு நின்ற, அமர்ந்த கோலத்தில் இருந்த 2 புத்தர் சிலைகள் மர்ம நபர்களால் திருடி செல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து மாகறல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்த விசாரணையில், 2007ம் ஆண்டு சிங்கப்பூரிலும், தற்போது அமெரிக்காவிலும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமூக ஆர்வலர் விஜயகுமார் என்பவர், ஆர்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ராஜகோபால் என்பவர் எழுதிய அறிஞர் பார்வையில் பவுத்தம் எனும் நூலில் இந்த புத்தர் சிலை படம் இருப்பதைப் பார்த்து, இது தொடர்பான ஆதாரங்களை திரட்டி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் 2002ம் ஆண்டு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் காஞ்சிபுரம் சுற்றியுள்ள கோயில்கள் குறித்த பயணியர் வழிகாட்டி எனும் புத்தகத்தில் ஆர்பாக்கம் ஜெயினர் ஆலய குறித்த விளக்க உரையில் இங்கு புத்தர் சிலை உள்ளது என்பது பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர், உள்நாட்டு பாதுகாப்பு பிரிவிடம் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், கூடுதல் விவரங்களைத் திரட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று ஆற்பாக்கம் கிராமத்தில் வந்து விசாரணை நடத்தினர்.  கிராமத்தில் இருந்த தொன்மை வாய்ந்த புத்தர் சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான தகவலால் அக்கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: