×

ஆப்கானிஸ்தானில் பயங்கரம்: மசூதியில் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 35 ஆனது

காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதியில் நேற்று நடந்த குண்டு வெடிப்பில் பலியானவர்கள் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் ஷியா, சன்னி பிரிவினர் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. சமீபகாலமாக நடந்த தாக்குதல்களுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பிரசித்தி பெற்ற மசூதியில் நேற்று ஏராளமானோர் வழக்கமான தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மசூதிக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால் தொழுகையில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓட்டம் பிடித்தனர். இந்த குண்டு வெடிப்பில் 35க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி பலியானதாக கூறப்படுகிறது. பலர் காயமடைந்தனர்.

தகவலறிந்து மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து ஆப்கன் போலீசார் விசாரித்து வருகின்றனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘காபூலில் உள்ள ஒரு மசூதியில் தொழுகை நடந்தபோது திடீரென குண்டு வெடிப்பு சத்தம் கேட்டது.

இதில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிகிறது. பலர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த குண்டுவெடிப்பில் அருகில் உள்ள வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இன்னும் எத்தனை பேர் பலியானார்கள் என்ற விவரம் முழுமையாக தெரியவில்லை. அது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது’ என்றார்.

Tags : Afghanistan , Terror in Afghanistan: Mosque blast: Death toll rises to 35
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி