மயிலாடுதுறையில் நள்ளிரவில் பயங்கரம்; வன்னியர் சங்க நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை: 10 பேரை பிடித்து போலீஸ் விசாரணை

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் வன்னியர் சங்க நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மயிலாடுதுறை கொத்த தெருவை சேர்ந்தவர் கண்ணன்(31). வன்னியர் சங்க நகர செயலாளர். இவருக்கும், கலைஞர் காலனியை சேர்ந்த மின்வாரிய தொழிலாளி கதிரவன் என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓட்டலில் சாப்பிட்ட போது தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து கதிரவன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து கண்ணன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் இருந்துவிட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விடுதலையானார். அதன்பின்னர் கண்ணனுக்கும், கதிரவனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு கண்ணன் பீடா வாங்குவதற்காக புதிய பஸ் ஸ்டாண்டுக்கு டூவீலரில் வந்தார். உடன் மற்றொரு டூவீலரில் 2 நண்பர்களும் வந்தனர். கலைஞர் காலனி பகுதி வந்தபோது அங்கு மர்ம கும்பல் ஆயுதங்களுடன் நின்றதை பார்த்து  கண்ணனுடன் வந்த நண்பர்கள் டூவீலரில் தப்பி விட்டனர். கண்ணனும் தப்பிக்க முயன்றபோது அந்த கும்பல் கண்ணனை சுற்றி வளைத்து மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக  வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் தலை மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயமடைந்த கண்ணன் ரத்த ெவள்ளத்தில் அந்த இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்து வந்த போலீசார் கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேகத்தின் பேரில் 10 பேரை பிடித்து கொலைக்கான காரணம் பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த தெற்குபொய்கைநல்லூர் கீழத்தெருவை சேர்ந்தவர் வீராசாமி. இவரது மகன் மனோகரன்(40). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று இரவு 10 மணி அளவில் மனோகரன் வேளாங்கண்ணி முச்சந்தி பகுதியில் உள்ள அலுவலகத்தில் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் திடீரென அலுவலகத்துக்குள் புகுந்து மனோகரனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். அப்போது மர்ம நபர்களை மனோகரனின் நண்பர் மணிவேல் தடுக்க முயன்றார். இதனால் அவருக்கும் அாிவாள் வெட்டு விழுந்தது. அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த மனோகரன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்து மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மனோகரனை நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மனோகரன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கொலையான மனோகரனின் அண்ணன் ரமேஷ் நாகை தெற்கு ஒன்றிய அதிமுக நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Related Stories: