பூந்தமல்லியில் 550 பவுன் நகை மாயம்; மற்றொரு காதலரிடம் நகை, பைக் கொடுத்தேன்: மாடல் அழகி சுவாதி வாக்குமூலம்

பூந்தமல்லி: பூந்தமல்லியில் தொழிலதிபர் 550 பவுன் நகைகளை கள்ளக்காதலிக்கு கொடுத்த வழக்கு தொடர்பாக, இருவரையும் கடந்த 2 நாட்களுக்கு முன் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். இதில், அந்த நகைகளை மற்றொரு காதலரிடம் கொடுத்து வைத்திருப்பதாக மாடல் அழகி வாக்குமூலம் அளித்ததாக தெரியவந்தது.

சென்னை அருகேபூந்தமல்லி, முத்துநகர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (47). இவர், பேருந்து நிலையம் அருகே இனிப்பு கடை மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக தனது சொந்த வீட்டிலேயே தனது மனைவி, தாயார் மற்றும் தம்பி மனைவி ஆகியோருக்கு சொந்தமான 550 பவுன் நகைகளை திருடி, தனது கள்ளக்காதலியும் மாடல் அழகியுமான சுவாதி (22) என்ற பெண்ணின் அழகில் மயங்கி பரிசாக கொடுத்துள்ளார். மேலும், தனது கள்ளக்காதலிக்கு ரூ.30 லட்சம் ரொக்கப் பணம், ஒரு சொகுசு கார் மற்றும் விலையுயர்ந்த பைக்கை சேகர் வாங்கி தந்துள்ளார்.

 

இதுகுறித்து தகவலறிந்ததும் பூந்தமல்லி போலீசில் சேகரின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகர் மற்றும் மாடல் அழகி சுவாதி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், தனக்கு எந்த நகைகளையும் சேகர் கொடுக்கவில்லை என சுவாதி மறுப்பு கூறியதாக தெரியவந்தது. பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து, சுவாதியிடம் இருந்து நகைகளை மீட்பதற்காகவும், இதன் பின்னணி காரணங்கள் குறித்து தீவிரமாக விசாரிக்க இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி போலீசார் முடிவு செய்தனர்.

 

அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன் சேகரை 3 நாள், சுவாதியை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, கடந்த 2 நாட்களாக இருவரையும் ஒரு ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர். இதைத் தொடர்ந்து, மாடல் அழகி சுவாதிக்கு சேகர் வாங்கி கொடுத்த ரூ.10 லட்சம் மதிப்பிலான ஒரு பைக், ஒரு புல்லட், 100 கிராம் நகையை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், தனக்கு சேகர் கொடுத்த நகைகளை மற்றொரு காதலரான ஜெரீன் என்பவரிடம் கொடுத்து வைத்துள்ளதாக மாடல் அழகி சுவாதி வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில், எனது அழகில் மயங்கிய சேகர், அவரது வீட்டிலிருந்து நகைகளை எடுத்து வந்து, எனக்கு அணிவித்து அழகுபார்ப்பார். பின்னர் எனக்கே அந்த நகைகளை கொடுத்துவிடுவார்.

 

அவர் வாங்கி கொடுத்த நகைகள், விலையுயர்ந்த பைக் போன்றவற்றை மற்றொரு காதலரான ஜெரீனிடம் கொடுத்துள்ளேன் என சுவாதி வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் கூறுகின்றனர். ஜெரீன் குறித்து போலீசாரின் விசாரணையில், அவர் வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்களின் மனைவிகள், குடும்ப பிரச்னையில் சிக்கி கணவரை பிரிந்து வாழும் வசதியான வீட்டுப் பெண்கள் ஆகியோரை குறிவைத்து, அவர்களை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதும், அவர்களிடம் நகை, பணம் போன்றவற்றை பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

 

இதற்கிடையே தன்னிடம் நகைகளை கொடுத்த சுவாதி போலீசில் சிக்கியதை அறிந்ததும் ஜெரீன் தலைமறைவாகிவிட்டார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சுவாதி கொடுத்த நகைகளுடன் தலைமறைவான ஜெரீனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஏற்கெனவே சேகரை 3 நாள் காவலிலும், சுவாதியை 5 நாள் காவலில் விசாரிக்க திட்டமிட்ட போலீசார், 2 நாட்களுக்குள் விசாரணையை முடித்து, நேற்றிரவு 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: