×

தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றம் சார்பில் நந்தனம் கல்லூரியில் 3 நாட்கள் பிரமாண்ட சென்னை திருவிழா: ஜெகத் கஸ்பர் பேட்டி

சென்னை: தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றம் சார்பில் சென்னை நந்தனம் கல்லூரியில் சென்னை திருவிழா வரும் 19ம்தேதி முதல் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறுகிறது என்று ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை ஜெகத் கஸ்பர் கூறினார்.

 இதுகுறித்து, ஒருங்கிணைப்பாளரும் அருட்தந்தையுமான ஜெகத் கஸ்பர் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக சட்டப் பேரவை அமைந்திருக்கும் நிலத்தினை 383 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் விலை கொடுத்து வாங்கிய நாளை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22ம்தேதி ‘சென்னை நாள்’ எனச் சிறப்பிக்கப்படுகிறது. ‘தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றம்’ ‘நட்பு, வணிகம், கொண்டாட்டம்’ எனும் உட்கருத்தில் இம்மாநகருக்கு விழா எடுத்து மகிழ்கிறது.

 இந்த அமைப்பானது சாதி, சமயம், அரசியல் வேறுபாடுகளைக் கடந்து வேளாண்மை, வணிகம், தொழில் போன்ற பொருளாதார நடவடிக்கைகள் மூலம் தமிழரை ஒருங்கிணைக்கவும், அதன் வழியாக ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்கான பொருளாதார வலிமையை கட்டமைக்கலாம் என்றும் நம்புகிறது. சுமார் ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட சென்னை பெருநகரம் மிகப்பெரிய சந்தையும் கூட. இந்நகரின் தமிழ் வணிகர்கள், விற்பனையாளர்கள் ஒன்றிணைந்து தமிழகத்தின் உற்பத்தியாளர்களை குறிப்பாக சிறு, குறு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வழிகளை சிந்தித்தால் தமிழக மக்களின் பணம் தமிழகத்திலேயே சுழலும்.

தமிழக அரசின் டிரில்லியன் டாலர் பொருளாதாரக் கனவுக்கு வணிகர்-விற்பனையாளர் சமூகம் செய்யும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பாக அமையும். இப்பெரும் பணிக்கு சென்னையின் வணிகர்-விற்பனையாளர் சமூகத்தினை சென்னை திருவிழா 2022 அழைக்கிறது. சென்னை திருவிழாவில், சிறு, குறு வணிகர்கள், உற்பத்தியாளர்கள், தனித்துவம் வாய்ந்த பொருட்களை சந்தைப்படுத்த விரும்புவோரை ஊக்கப்படுத்தவும் அவர்தம் உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தவும், சந்தைப்படுத்தவும் வணிகக் கண்காட்சி நடக்கிறது. அதேபோன்று, உணவுத் திருவிழா, தொண்டைமண்டல காளைகள் கண்காட்சி, மூலிகைக் கண்காட்சி நடைபெறுகிறது.

 மேலும் வரும் 20ம்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வணிக ஒன்று கூடல் நிகழ்வு நடைபெறும். சிறு, குறு தொழில் முனைவோர்களையும் பெருந்தொழில் தொழில் முனைவோரையும் ஒரே இடத்தில் சந்திக்க செய்வதும் ஒருவருக்கொருவர் அனுபவங்களையும் வணிக தேவைகளையும் பகிர்ந்து கொள்ள செய்வதே இந்த நிகழ்வின் நோக்கம்.
 21ம்தேதி சென்னை திருவிழாவின் முக்கிய சிறப்பு நிகழ்வாக 5000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. 70 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள இசைவு தெரிவுத்துள்ளனர்.

 ஒவ்வொரு நாளும் மாலை 5மணி முதல் இரவு 10 மணி வரை இசை, நடனம், கச்சேரி, கிராமிய விளையாட்டுகள், சிலம்பம், களறி அடிமுறை, மல்லம் போன்ற மரபு வழி வீர விளையாட்டுகள் ஆகியவை நடைபெற உள்ளன. ‘சென்னை சங்கமம்’ கலை பண்பாட்டு விழாவை வடிவமைத்த தமிழ் மையம் அமைப்பு இதனை ஒருங்கிணைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Jegat Kaspar ,Nandanam College ,Tamil Industries Business Agricultural Corporation , Tamil Chamber of Commerce and Agriculture, Nandanam College, Jagat Kaspar
× RELATED பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது...