தேதி நெருங்குவதால் பரபரப்பு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியா?...

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், தலைவர் பதவிக்கு போட்டியிடுவது தொடர்பான தனது நிலைப்பாட்டை ராகுல் இன்னும் தெரிவிக்காமல் மவுனம் சாதித்து வருகிறார். கடந்த 2014 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து, தனது காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அப்போது முதல் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைமுறை வரும் 21ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 20ம் தேதிக்குள் முடியும் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்து இருந்தது.

இந்த தேர்தல் நடைமுறை தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவாரா என்பது உறுதி செய்யப்படாமல் உள்ளது. சோனியாவுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் ஏற்க வேண்டும் என்று கட்சியின் பெரும்பாலான மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், ராகுலோ தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் மவுனம் காக்கிறார்.

இதனால், தலைவர் பதவிக்கு அவர் போட்டியிடுவாரா? மாட்டாரா? என்ற குழப்பம் கட்சியில் நிலவுகிறது. ராகுல் தலைமை ஏற்க தயங்கும் நிலையில், அசோக் கெலாட், மல்லிகார்ஜூன கார்கே, முகுல் வாஸ்னிக், குமாரி சைலஜா, கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.

மோடியின் சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம்

ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘5 மாத கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து 3 வயது சிறுமியை கொன்றவர்கள் சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவின் போது விடுவிக்கப்பட்டு உள்ளனர். பெண் சக்தி பற்றி பொய் பேசுபவர்களால் பெண்களுக்கு என்ன செய்தி கொடுக்கப்படுகிறது? பிரதமரே, உங்கள் சொல்லுக்கும், செயலுக்கும் உள்ள வித்தியாசத்தை ஒட்டு மொத்த இந்தியாவும் பார்க்கிறது,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: