இளம்வீரர்களுடன் எனது அனுபவத்தை மகிழ்ச்சியுடன் பகிர்வேன்: தவான் பேட்டி

ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் 36 வயதான ஷிகர் தவான், பிசிசிஐ இணைய தளத்திற்கு அளித்துள்ள பேட்டி : அணியில் உள்ள இளம் வீரர்களுடன் எனது அனுபவங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். இளம் வீரர்கள் எப்போது என்னிடம் ஆலோசனை கேட்டாலும் அவர்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன்.ராகுல் மீண்டும் அணிக்கு திரும்பியதுடன், இந்த தொடருக்கு கேப்டனாக செயல்படுவது மிகவும் நல்ல செய்தியாகும்.

இந்திய அணியில் அவர் முக்கியமான வீரர்களில் ஒருவர். ஆசிய கோப்பை போட்டிக்கு முன்பாக அவர் தன்னை தயார்படுத்திக் கொள்ள இந்த போட்டி உதவும். இந்த தொடரின் மூலம் நிச்சயம் அவர் நிறைய பலன் அடைவார் என்று நம்புகிறேன். காயத்தால் வாஷிங்டன் சுந்தர் விலகி இருப்பது வருத்தம் அளிக்கிறது. எங்கள் அணியில் அவர் முக்கியமான வீரர். ஒரு சுழற்பந்து வீச்சாளராக அவரை தவற விடுகிறோம். ஆனால் காயத்தில் சிக்குவது விளையாட்டின் ஒரு பகுதி. விரைவில் அவர் குணமடைந்து திரும்புவார் என்று நம்புகிறேன், என்றார்.

Related Stories: