×

தஞ்சாவூர் மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் குறுவை பயிருக்கு ரசாயன உரத்திற்கு மாற்றாக இயற்கை உரம் தெளிப்பு: புதிய முயற்சியில் விவசாயி மும்முரம்

வல்லம்: தஞ்சாவூர் மாவட்டம் ராமநாதபுரம் ஊராட்சி அருகே தன் வயலில் குறுவை சாகுபடி பயிருக்கு ரசாயன உரத்திற்கு பதிலாக இயற்கை எருவாக ஆட்டுப்புழுக்கை மற்றும் மாட்டு சாணம் ஆகியவற்றை கலந்து தெளிக்கும் பணியில் விவசாயி மும்முரமாக ஈடுபட்டார்.கடந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் மாதம் 12ம் தேதி திறக்கப்பட்டது. இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை முன் கூட்டியே திறக்கப்பட்டது. இதனால் கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலக்கை தாண்டி சாகுபடி நடந்துள்ளது என்று வேளாண் துறை தெரிவித்துள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் ராமநாதபுரம், ரெட்டிப்பாளையம், ஆலக்குடி, வல்லம், சித்திரக்குடி உட்பட பல பகுதிகளிலும் குறுவை சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பல பகுதிகளில் 5 வாரங்கள் கடந்த நாற்றுக்கள் செழுமையாக வளர்ந்து நிற்கிறது.

வளர்ந்துள்ள குறுவைபயிருக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக விவசாயிகள் உரம் தெளிக்கும் பணிகளில்மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை அருகே ராமநாதபுரம் ஊராட்சியில் விவசாயி சதீஷ் (36) என்பவர் தனது சாகுபடி வயலில் ஆடுதுறை 36 வகை நெல்லை பயிரிட்டுள்ளார். பல ஆண்டுகளாக இயற்கை வழி சாகுபடியை மேற்கொள்ளும் இவர் ரசாயன உரத்திற்கு பதிலாக ரெட்டிப்பாளையத்தில் ஆட்டு கிடை போட்டுள்ளவர்களிடம் இருந்து ஆட்டுப்புழுக்கை மற்றும் கிராமப்பகுதியில் இருந்து சாணம் ஆகியவற்றை வாங்கி வந்து இயற்கை உரமாக தெளிக்கிறார்.

இதற்காக பேய்வாரி தரைப்பாலத்தில் ஆட்டுப்புழுக்கை மற்றும் சாணத்தை காயவைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தார். இதுகுறித்து விவசாயி சதீஷ் கூறுகையில், பல ஆண்டுகளாக இயற்கை வழி சாகுபடியை செய்து வருகிறேன். ரசாயன உரங்கள் தெளிக்காமல் ஆட்டுக்கிடை போட்டுள்ளவர்களிடம் மொத்தமாக ஆட்டுப்புழுக்கை மற்றும் சாணத்தை வாங்கி வந்து உலர்த்தி நசுக்கி பயிருக்கு தெளிப்பதால் நன்கு ஊட்டமாக வளரும். நாற்று நட்டதில் இருந்து இரண்டாவது முறையாக தற்போது இயற்கை உரம் தெளிக்கிறேன் என்றார்.

Tags : Ramanathapuram ,Thanjavur District , தஞ்சாவூர் மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் குறுவை பயிருக்கு ரசாயன உரத்திற்கு மாற்றாக இயற்கை உரம் தெளிப்பு: புதிய முயற்சியில் விவசாயி மும்முரம்
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...