×

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது; இரட்டை தலைமையே தொடரும்: உயர்நீதிமன்ற தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி..!

சென்னை: ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஜூலை 11ம் தேதி நடந்தது. இதில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த பொதுக்குழு கூட்டம் அதிமுகவின் சட்ட விதிகளுக்கு முரணாக நடத்தப்பட்டதாக கூறி பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி 2 வாரங்களில் விசாரித்து முடிக்குமாறு உத்தரவிட்டது. அதன்படி வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டபோது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை நீதிபதிக்கு மனு அளிக்கப்பட்டது. இறுதியில் அந்த மனு திரும்பப் பெறப்பட்டதை தொடர்ந்து வழக்கில் புதிய நீதிபதியை நியமிக்குமாறு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார்.

இதையடுத்து, வழக்கை விசாரிக்க நீதிபதி ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார். அவர் முன்பு கடந்த 10 மற்றும் 11ம் தேதி விசாரணை நடந்தது. பரபரப்பான வாதங்களுக்கு பிறகு தீர்ப்பை நீதிபதி தள்ளிவைத்தார். இந்நிலையில் ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜூன் 23க்கு முன் இருந்த நிலையே நீடிக்கும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் கூட்டத்தை கூட்ட வேண்டும். தனி கூட்டம் கூட்டக் கூடாது எனவும், பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உயர்நீதிமன்ற தீர்ப்பால் பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது. இதனால் ஈபிஎஸ்க்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இதனிடையே அதிமுக பொதுக்குழு செல்லாது என நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் ஓபிஎஸ் தரப்பினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று ஓபிஎஸ் தரப்பினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சி தெரிவித்து வருகினற்னர்.


Tags : edapadi paranisamy , AIADMK general body meeting void; Dual leadership will continue: Edappadi Palaniswami is shocked by the High Court verdict..!
× RELATED விசிக தலைவர் திருமாவளவனின் உடல்நலம்...