×

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் 2 பிரேத பரிசோதனை முடிவுகளை ஜிப்மர் மருத்துவக் குழு செய்த ஆய்வு நிறைவு: இன்று அல்லது நாளை அறிக்கை தாக்கல்..!

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாணவியின் பிரேத பரிசோதனை முடிவுகள் ஆய்வு தொடர்பான அறிக்கையை ஜிப்மர் மருத்துவ குழுவினர் இன்று அல்லது நாளை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்த மாணவி ஸ்ரீமதி(17)‌, கடந்த மாதம் 13ம் தேதி அங்கு மர்மமான முறையில் இறந்தார். இதை கண்டித்து கடந்த 17ம் தேதி நடந்த போராட்டம் கலவரமானது. இதில் பள்ளி வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டது.

இருப்பினும் மனுததாரர் தரப்பில் மருத்துவர் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை ஏற்கப்படவில்லை. இதனை எதிர்த்து மாணவியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அங்கும் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையே மாணவியின் உடல், மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு  மருத்துவமனையில் வைக்கப்பட்டது. அவரது உடலை பெற்றுக்கொள்ளுமாறு வீட்டில் கடந்த 19ம் தேதி வருவாய்த்துறை மூலம் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனால் மாணவி உடலை வாங்க பெற்றோர் முன்வராததால், காவல்துறை தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை திரும்ப பெறப்போவதில்லை என்றும் மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை, வீடியோவை புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையில் 3 மருத்துவர்கள் கொண்ட குழு ஆய்வு செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

உத்தரவின் அடிப்படையில் பிரேத பரிசோதனை முடிவுகள், வீடியோ காட்சிகள் ஜிப்மர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் 2 பிரேத பரிசோதனை முடிவுகளை ஜிப்மர் மருத்துவக் குழு செய்த ஆய்வு நிறைவு பெற்றது. இன்று அல்லது நாளை விழுப்புரம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.


Tags : JIPMER Medical Team ,Srimati , Completion of 2 post-mortem results of Kallakurichi student Smt. Jipmar medical team: Report submission today or tomorrow..!
× RELATED கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி...