×

ஒத்தவாடை தெருவில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் முறைகேடு; பொதுமக்கள் சரமாரி கேள்வி

மாமல்லபுரம்: ஒத்தவாடை தெருவில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில், மின்சார பயனிட்டாளர்களிடம் கையூட்டு வாங்கிக்கொண்டு,  முறைகேடு நடந்து வருகிறது. இதனை கண்காணிக்க சிசிடிவி கேமரா பொருத்துவது எப்போது? என பொதுமக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். மாமல்லபுரத்தில், ஒத்தவாடை தெருவில் கடந்த 5 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் மின்வாரிய அலுவலகம் இயங்கி வருகிறது. மாமல்லபுரத்தில், ஓட்டல், ரெஸ்ட்டாரன்ட், நட்சத்திர ரிசார்ட்கள், தங்கும் விடுதிகள் ஏராளமானவை உள்ளன. மேலும், மாமல்லபுரத்தை சுற்றி பல்வேறு கிராமங்களும் உள்ளன. இங்குள்ள, ஊழியர்கள் புதிய மின் இணைப்பு, மின் இணைப்பு பெயர் மாற்றம், தற்காலிக இணைப்பு, இலவச விவசாய இணைப்பு போன்றவற்றுக்காக வரும் பொதுமக்களிடம், தொடர்ந்து கையூட்டு கேட்கின்றனர். இதற்காக, பல இடைத்தரகர்கள் செயல்படுகின்றனர். அவர்கள் தான், விண்ணப்பத்தை பூர்த்தி செய்தல், பதிவு செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்வதாக கூறப்படுகிறது.

தற்காலிக, மின் இணைப்பு பெற வரும் பொதுமக்களிடம் ரூ.10 ஆயிரமும், ஓட்டல் நிர்வாகங்களிடம் ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.70 ஆயிரம் வரை பெறப்படுவதாக கூறப்படுகிறது. இது மட்டுமின்றி, பொருத்தும் மின்வயர்களுக்கு மின்சார வாரியத்திற்கு செலுத்த ஒரு குறிப்பிட்ட நிதியும் வசூலிக்கப்படுகிறது. இவை, அனைத்துக்கும் பணத்தை செலுத்தினால் மட்டுமே கணினியில் ஏற்றப்படுகிறது. ஒரு மின், இணைப்பு பெறுவதற்கு பொதுமக்கள் 10 நாட்கள் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஒரு சில, நேரங்களில் உதவி பொறியாளர் இல்லை. உங்க, ஏறியா லைன்மேன் வரவில்லையென பல மணி நேரம் காக்க வைக்கின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரிய உயரதிகாரிகள், உடனடியாக தலையிட்டு மாமல்லபுரம் மின்வாரிய அதிகாரிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது, மாமல்லபுரம் ஒத்தவாடை தெருவில் மின்வாரிய அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த, அலுவலகத்தில் இடைத்தரகர்கள் நடமாட்டம், முறைகேடுகள்  போன்றவை அதிகளவில் நடக்கிறது. மேலும், அலுவலகத்திற்குள், தைரியமாக கையூட்டு வாங்குவது தொடர்கிறது. எனவே, இந்த அலுவலகம் மட்டுமின்றி அனைத்து அலுவலகங்களிலும், கேமரா பொருத்தும் பணியை, மின் வாரியம் முழு வீச்சில் செயல்படுத்த வேண்டும். இதன் வாயிலாக, பல தவறுகள் கட்டுப்படுத்தப்படும் என கூறினர்.

Tags : Electricity ,Board ,Othawada Street , Irregularity at the Electricity Board office on Othawada Street; A barrage of questions from the public
× RELATED பெரம்பலூரில் மின்கம்பிகளை உரசிய மரக்கிளைகளை அகற்றும் பணி