கடன் வழங்கியதாக ரூ.3.63 கோடி கையாடல் சேலத்தில் மேலும் ஒரு கூட்டுறவு கடன் சங்க நிர்வாக குழு கலைப்பு

சேலம்: சேலம் அருகே போலியாக ரூ.3.63 கோடி பயிர்க்கடன் வழங்கி நிதியிழப்பை ஏற்படுத்திய வெள்ளரிவெள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாக குழுவை கலைத்து கூட்டுறவு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சேலம் மாவட்டம் இடைப்பாடியில் வெள்ளரி வெள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கப்படுகிறது. உரமும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

சங்கத்தில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் நிலுவையில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து கூட்டுறவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், 113 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் ரூ.3.63 கோடி வழங்கியதாக கணக்கு எழுதப்பட்டுள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு கடன் வழங்காமல் நிதியிழப்பு ஏற்படுத்தியது தெரிந்தது. மேலும், உரம் விற்பனையிலும் முறைகேடு நடந்துள்ளது. அது தொடர்பாக சங்கத்தின் நிர்வாக குழுவினர் விளக்கம் அளிக்க கூட்டுறவு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பான நிர்வாக குழுவினரின் விளக்கம் ஏற்க கூடியதாக இல்லை. இதையடுத்து, சங்கத்தில் 113 விவசாயிகளுக்கு ரூ.3.63 கோடி கடன் வழங்கியதாக கணக்கு எழுதப்பட்டு, பணத்தை கையாடல் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து நிர்வாககுழுவை கலைத்து கூட்டுறவு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஏற்கனேவே, கருப்பூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு நிர்வாக குழுவை கலைத்து கூட்டுறவு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தற்போது வெள்ளரிவெள்ளி கூட்டுறவு கடன் சங்க நிர்வாகக்குழுவும் கலைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: