×

இஸ்ரேலில் இருந்து வந்த அதிகாரியின் பேத்தி கைப்பையில் இருந்த துப்பாக்கி குண்டு: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை: ஒன்றிய அரசின் கலால் துறையில் உயரதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணா துபே (64). இவர், குடும்பத்தினர் 5 பேருடன் இஸ்ரேலுக்கு சுற்றுலா சென்றார். பின்னர், துபாய் வழியாக இண்டிகோ விமானம் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்னை வந்தனர். பெங்களூரு செல்வதற்காக சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு சென்றனர். அங்கு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கிருஷ்ணா துபேவின் பேத்தியின் (5) கைப்பையில் இருந்து வெடிகுண்டு இருப்பதற்கான எச்சரிக்கை மணி ஒலித்தது.

இதனால் அதிகாரிகள் அவர்களை நிறுத்தி, குழந்தை வைத்திருந்த கைப்பையை பாதுகாப்பாக பிரித்துபார்த்தனர். அதற்குள் வெடிக்காத ஒரு துப்பாக்கி குண்டு இருந்தது. அந்த குண்டை பறிமுதல் செய்து, கிருஷ்ணா துபே குடும்பத்தினரின் பயணத்தை ரத்துசெய்தனர். பின்னர், மேல் நடவடிக்கைக்காக சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அப்போது, ‘இஸ்ரேல் நாட்டின் சுற்றுப்பயணம் செய்யும்போது, கடற்கரை மணலில் இந்த பொருள் கிடந்தது. அது துப்பாக்கி குண்டு என்று தெரியாமல் எடுத்து குழந்தையிடம் விளையாட கொடுத்திருந்தோம்’ என்று கூறினர்.

இதையடுத்து அந்த குண்டை போலீசார் ஆய்வு செய்தபோது, அது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டது என்றும், பெரிய துப்பாக்கிகளில் செலுத்தி வெடிக்கக்கூடிய ‘9 எம்எம்’ ரகம் என்றும் தெரிந்தது. அவர்களை எச்சரித்து, எழுதி வாங்கி கொண்டு, பெங்களூருக்கு அனுப்பி வைத்தனர். சென்னை விமான நிலையத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த சனி, ஞாயிறு, திங்கள் கிழமைகளில் 7 அடுக்கு பாதுகாப்பு இருந்த நிலையில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு சர்ச்சையையும் உருவாக்கியுள்ளது.

Tags : Israel ,Chennai airport , Israel, Gunshot, Chennai Airport,
× RELATED ஈரான் அனுப்பிய 300 டிரோன்களை வழிமறித்து...