அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு: பதற்றத்தில் எடப்பாடி-ஓபிஎஸ்

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தாக்கல் செய்த வழக்கில்  உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. யாருக்கு சாதகமாக தீர்ப்பு வருமோ என்ற பதற்றத்தில் எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும் சென்னையில் முடங்கி உள்ளனர். அவர்கள் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இது, அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஜூலை 11ம் தேதி நடந்தது. இதில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த பொதுக்குழு கூட்டம் அதிமுகவின் சட்ட விதிகளுக்கு முரணாக நடத்தப்பட்டதாக கூறி பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி 2 வாரங்களில் விசாரித்து முடிக்குமாறு உத்தரவிட்டது. அதன்படி வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டபோது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை நீதிபதிக்கு மனு அளிக்கப்பட்டது. இறுதியில் அந்த மனு திரும்பப் பெறப்பட்டதை தொடர்ந்து வழக்கில் புதிய நீதிபதியை நியமிக்குமாறு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார்.

இதையடுத்து, வழக்கை விசாரிக்க நீதிபதி ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார். அவர் முன்பு கடந்த 10 மற்றும் 11ம் தேதி விசாரணை நடந்தது. பரபரப்பான வாதங்களுக்கு பிறகு தீர்ப்பை நீதிபதி தள்ளிவைத்தார். இந்நிலையில், இந்த வழக்குகளில் நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பளிக்கவுள்ளார். அதிமுக பொதுக்குழு எதிர்த்த வழக்கின் தீர்ப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்பதால் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமியும், வழக்கு தொடர்ந்த ஓ.பன்னீர்செல்வமும் தீர்ப்பை எதிர்பார்த்து சென்னையிலேயே முடங்கி உள்ளனர். இந்தநிலையில் தீர்ப்பு இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், இரு தரப்பினரும் தங்களது மூத்த ஆதரவு தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இது அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: