×

யார் வேண்டுமானாலும் வந்து விசாரித்து கொள்ளலாம் பொதுத்தளத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடர்பான செலவு: அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

சென்னை: சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகள் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. போட்டிகள் நடைபெறுவதையடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய  டென்னிஸ் மைதானத்தை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று  ஆய்வு மேற்கொண்டார். அவருடன் ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ டாக்டர் எழிலன், மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர் சிற்றரசு, விளையாட்டு, மேம்பாட்டு துறை உறுப்பினர், செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் அமைச்சர் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: சர்வதேச தரத்தில் டென்னிஸ் மைதானம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த மைதானத்தில் உள்ள விளக்குகள் ரூ.3 கோடி செலவில், சர்வதேச தரத்தில் புதுப்பிக்கப்படவுள்ளது. அடுத்த 15 நாட்களுக்குள் மைதானத்தை புதுப்பிக்கும் பணிகள் நிறைவடையும். வரும் செப்டம்பர் 8ம் தேதியிலிருந்து மைதானத்தில் விளையாடலாம். அதிமுக ஆட்சியிலிருந்தால், இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு ரூ.500 கோடி செலவு செய்திருப்பார்கள்.

ஆனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெறும் ரூ.114 கோடியில் மிகவும் குறைவாக செலவு செய்துள்ளார். ஒரு ரூபாய் செலவு செய்து மூன்று ரூபாய்க்கான பணிகள் நடைபெற்றுள்ளது. இதன்மூலம் சர்வதேச அளவில் தமிழக முதல்வர் தான் ஒரு மிகச் சிறந்த நிர்வாகி என்பதை சாதித்து காட்டியிருக்கிறார். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான அனைத்து பணிகளுமே எவ்வளவு செலவு குறைவாக நடத்த முடியுமோ, அத்தனை குறைவாக செலவு செய்து நடத்தியுள்ளோம். செஸ் ஒலிம்பியாட் தொடர்பான செலவுகளை பொதுத் தளத்தில் வைக்கிறோம். யார் வேண்டுமானாலும் வந்து விசாரித்துக் கொள்ளலாம். இவ்வாறு அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.


Tags : olympiad ,Minister ,Meiyanathan , Anyone can come and inquire about the expenditure related to chess olympiad on public platform: Minister Meiyanathan interview
× RELATED காவேரி கூக்குரல் சார்பில் ஒரே நாளில் 4...