×

ஓய்வூதியம் உயர்த்தி வழங்கியதற்காக சுதந்திரப்போராட்ட தியாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி

சென்னை: ஓய்வூதியம் உயர்த்தி வழங்கியதற்காக சுதந்திர போராட்ட தியாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் அமைப்பு தலைவர் நா.விஜயராகவன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை, கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின உரையாற்றியபோது, ‘சுதந்திர போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதிய தொகை ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார். அதேபோன்று சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு தமிழக அரசு வழங்கி வரும் உதவித்தொகையை உயர்த்தி வழங்க உத்தரவிட்டதற்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அரிஜன மக்களை அழைத்துக்கொண்டு ஆலய பிரவேசம் நடத்திய தியாகி வைத்தியநாத ஐயருக்கு மதுரையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும். தமிழக அரசு சார்பில் நியமிக்கப்படும் அரசு துறை வாரியங்கள் மற்றும் ஆணையம் பொறுப்புகளில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான மருத்துவ படியை ரூ.1000ஆக உயர்த்தி வழங்க வேண்டும். சுதந்திர போராட்ட தியாகிகளின் பேரன், பேத்திகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் வழங்கப்படும் வீட்டுமனை, காலிமனை ஒதுக்கீட்டில் 5 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை மேலும் ரூ.3 ஆயிரம் உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Chief Minister ,M.K.Stalin , Thanks to Chief Minister M.K.Stalin for increasing the pension
× RELATED பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி...