சின்சினாட்டி ஒபன் டென்னிஸ்: 2வது சுற்றில் அலிசன்; லெய்லா வெளியேற்றம்

சின்சினாட்டி: அமெரிக்காவில் நடக்கும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, உள்ளூர் வீராங்கனை அலிசன் ரிஸ்க் அமிர்தராஜ் தகுதி பெற்றார். முதல் சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை சாரா சொரிபெஸ் (25 வயது, 48வது ரேங்க்) உடன் மோதிய அலிசன் ரிஸ்க் (32 வயது, 29வது ரேங்க்) 6-1, 7-6 (7-2) என நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 2 மணி, 2 நிமிடத்துக்கு நீடித்தது. இந்திய டென்னிஸ் பிரபலம் ஆனந்த் அமிர்தராஜின் மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (57வது ரேங்க்) 6-1, 6-0 என்ற நேர் செட்களில் பிரான்சின் ஆலிஸ் கார்னெட்டை மிக எளிதாக வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா, கேத்தரின் மெக்நல்லி ஆகியோரும் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

கனடா நட்சத்திரம் லெய்லா பெர்னாண்டஸ் 4-6, 5-7 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் எகடரினா அலெக்சாண்ட்ரோவாவிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தார். முன்னணி வீராங்கனைகள் பெத்ரா குவித்தோவா, தெரேசா மார்டின்கோவா (செக் குடியரசு), எலனா ரைபாகினா (கஜகஸ்தான்), வெரோனிகா குதெர்மெடோவா (ரஷ்யா), விக்டோரியா அசரென்கா (பெலாரஸ்) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். ஃபிரான்சிஸ் வெற்றி: ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் அமெரிக்காவின்  பிரான்சிஸ்  டியாஃபோ (25வது ரேங்க்), முன்னணி வீரரான இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை (15வது ரேங்க்) எதிர்கொண்டார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் 7-6 (6-3), 4-6, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்ற பிரான்சிஸ் 2வது சுற்றுக்குள் நுழைந்தார். முன்னாள் கிராண்ட் ஸ்லாம் சாம்பியன்களுக்கு  இடையிலான ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் ஆன்டி மர்ரே (47வது ரேங்க்) 7-6 (6-3),  5-7,  7-5 என்ற செட்களில்  சுவிஸ் நட்சத்திரம் வாவ்ரிங்காவை (306வது ரேங்க்) வீழ்த்தினார்.

Related Stories: