×

இம்மாத இறுதியில் அமைக்கப்படும் கியூட் தேர்வுடன் நீட், ஜேஇஇ இணைப்பதை திட்டமிட குழு: யுஜிசி தலைவர் தகவல்

புதுடெல்லி: ‘ஜேஇஇ, நீட் தேர்வுகளை கியூட் தேர்வுடன் இணைப்பதை திட்டமிட, இம்மாத இறுதியில் தனி குழு அமைக்கப்படும்,’ என யுசிஜி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்தார். ஒன்றிய பல்கலைக் கழகங்களில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, ‘கியூட்’ என்ற பெயரில் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இதனுடன் நீட் தேர்வு, ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளையும் இணைத்து நாடு முழுவதும் ஒரே தகுதித் தேர்வாக நடத்த இருப்பதாக பல்கலை மானியக் குழு (யுசிஜி) தலைவர் ஜெகதீஷ் குமார் சமீபத்தில் தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்நிலையில், ஜெகதீஷ் நேற்று அளித்த பேட்டியில், ‘கியூட் நுழைவுத் தேர்வின் முதல் 2 கட்டங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் பின்னடைவு அல்ல. அவற்றில் இருந்து பாடம் கற்று கொண்டோம். இனிமேல், அந்த தவறுகள் நடக்காமல் தடுக்கப்படும். இதனால், தேர்வு நடைமுறையிலோ அல்லது விரிவாக்க திட்டத்திலோ எந்த பாதிப்பும் இருக்காது. மாணவர்கள் பல நுழைவுத் தேர்வுகளை எழுதும் சுமையை குறைப்பதற்கான தேசிய கல்வி கொள்கையின்படி, ஒரே பொது நுழைவுத் தேர்வை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இது மிகப்பெரிய திட்டம் என்பதால் சரியாக திட்டமிட வேண்டும். இதற்கான சிறப்பு நிபுணர் குழு இம்மாத இறுதியில் அமைக்கப்படும். எனவே, கியூட் தேர்வுடன் ஜேஇஇ, நீட் தேர்வுகளை உடனடியாக இணைக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை,’ என்று தெரிவித்தார்.

* 4ம் கட்ட தேர்வு இன்று நடக்கிறது
கியூட் 4ம் கட்ட தேர்வு இன்று தொடங்கி 20ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 3.60 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். 4ம் கட்டத் தேர்வில், வேறு நகரங்களில் தேர்வு எழுத மையங்கள் கோரிய 11,000 மாணவர்களுக்கு வரும் 30ம் தேதி தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. முதலில் அனைத்து கட்ட தேர்வுகளும் 20ம் தேதியுடன் முடியும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆகஸ்ட் 30ம் தேதி முடிய உள்ளது. இதனால், இம்முறை கியூட் தேர்வுகள் 6 கட்டங்களாக பிரித்து நடத்தப்பட்டுள்ளது.

Tags : NEET ,JEE ,QUT ,UGC , Committee to plan merger of NEET, JEE with QUT exam to be held later this month: UGC chairman informs
× RELATED ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற...