உதகையில் இருந்து கூடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 70 மீட்டர் தூரத்திற்கு விரிசல்

நீலகிரி: உதகையில் இருந்து கூடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 70 மீட்டர் தூரத்திற்கு விரிசல் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து கூடலூர் வழியாக கேரள மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையாக அமைந்துள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் குறிப்பாக நடுவட்டம் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மிக கனமழையானது பெய்துள்ளது.

இதனால் உதகையிலிருந்து கூடலூர் செல்லக் கூடிய நடுவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளது. இவற்றை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைதுறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று உதகையிலிருந்து கூடலூர் வழியாக கர்நாடகா மற்றும் கேரள மாநிலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை மலைப்பாதையில் அமைந்துள்ள தெய்வமலை எஸ்டேட் பகுதியில் கடந்த 4 நாட்களாக 70 மீட்டர் நீளத்திற்கு சாலை உள்வாங்குவதால் அதனை அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் கூடலூர் கோட்ட பொறியாளர் செல்வம் அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலைத் துறையினர் விரிசல் ஏற்பட்ட பகுதிகளை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வந்தனர். மேலும் இந்த சாலை விரிசலானது தேசிய நெடுஞ்சாலையில் பூமிக்கடியில் பாறைகள் நகர்வதால் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாலைகள் உள்வாங்குவதால் அப்பகுதி முழுவதும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தொடர்ந்து சாலைகள் உள்வாங்கி கொண்டிருப்பதால் நெடுஞ்சாலைத்துறையினர் வாகனங்களை மெதுவாக இயக்க வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சாலை உள்வாங்கும் சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: