×

நிதி அமைச்சர் கார் மீது காலணி வீசிய 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது; சிறையில் அடைப்பு

மதுரை: மதுரை விமான நிலையத்தில் நிதி அமைச்சர் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த சரண்யா உள்பட 3 பெண்கள் உட்பட 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ முகாம் மீது நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் மதுரை மாவட்டத்தை ேசர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் வீர மரணமடைந்தார். அவரது உடல் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அப்போது, ராணுவ வீரரின் உடலுக்கு, நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விமான நிலையத்தில் வைத்து மலர் அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பினார். அப்போது, பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் அமைச்சரின் கார் மீது காலணியை வீசி தகராறில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரை முதற்கட்டமாக அவனியாபுரம் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர். அமைச்சர் கார் மீது காலணி வீசிய பெண் குறித்தும், அவருடன் வந்தவர்கள் குறித்தும் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் சீனிவாச பெருமாள், தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் முருகன், எஸ்ஐ சண்முகநாதனை கொண்ட தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

தனிப்படை போலீசார் அங்கு பதிவான வீடியோ காட்சிகள் மூலம் தலைமறைவாக இருந்தவர்களை தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் தேடி வந்தனர். இந்நிலையில், தனிப்படை போலீசார் திருமங்கலம் அருகேயுள்ள வாகைக்குளத்தில் பதுங்கியிருந்த மதுரை விளாங்குடியை சேர்ந்த சரண்யா, தனலட்சுமி, தெய்வானை ஆகிய 3 பெண்களையும் கைது செய்து, தல்லாகுளம் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து திருச்சி தொழிலதிபர் ஜெய் கருணா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags : Finance Minister , 4 people including 3 women arrested for throwing shoes at Finance Minister's car; Imprisonment
× RELATED தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி...