×

தோகைமலை அருகே தெலுங்கபட்டியில் மாலை தாண்டும் திருவிழா

தோகைமலை : தோகைமலை அருகே உள்ள பொருந்தலூர் ஊராட்சி தெலுங்கபட்டியில் நடந்த மாலை தாண்டும் திருவிழாவில் புதுக்கோட்டை மாவட்ட சலைஎருது மாடு முதல் பரிசை பெற்றது.கரூர் மாவட்டம் தோகைமலை அருகே பொருந்தலூர் ஊராட்சி முத்துப்பாலகிரி அரண்மனை கஸ்தூரி ரெங்க வசகப்பு நாயக்கர் பாளையபட்டு மந்தைக்கு உட்பட்ட கம்பலத்து நாயக்கர் சமூகத்தினருக்கு சக்காளம்மன் கோவில் உள்ளது.

இக்கோயிலுக்கு மாலை தாண்டும் திருவிழா நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டிற்கான திருவிழா நடத்துவதற்கு கஸ்தூரி ரெங்க வசகப்பு நாயக்கர் பாளையபட்டு மந்தைக்கு உட்பட்ட கிராம மக்கள் முடிவு செய்தனர். பின்னர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு காவிரியில் இருந்து புண்ணிய தீர்த்தம் அழைத்து வந்து கோயில் மற்றும் வீடுகளுக்கு தெளிக்கப்பட்டது.

தொடர்ந்து சக்காளம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து முக்கியதர்களுக்கு காப்பு கட்டி திருவிழா தொடங்கப்பட்டது. அன்று முதல் இப்பகுதி பக்தர்கள் விரதம் இருந்து சக்காளம்மனுக்கு 3 கால சிறப்பு பூஜைகளை செய்து வழிபட்டு வந்தனர்.=3 ம் நாள் நேற்று நடந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சலைஎருது மாடுகள் மாழை தாண்டும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக சக்காளம்மன் கோவில் முன்பாக அனைத்து மந்தைகளின் சலை எருது மாடுகளுக்கு புண்ணிய தீர்த்தம் தெளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து தாரை தப்பட்டை உருமி முழங்க கோயில் எதிரே சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள கொத்துக்கொம்பு கோயிலுக்கு சலை எருது மாடுகளை அழைத்து சென்றனர். அங்கு உள்ள கொத்துகொம்பு கோயிலில் சிறப்பு அபிசேகம் செய்து அனைத்து சலை எருது மாடுகளுக்கும் புண்ணிய தீர்த்தம் தெளித்து மாலை ஓட்டத்தை தொடங்கி வைத்தனர்.

அங்கிருந்து கஸ்தூரி ரெங்க வசகப்பு நாயக்கர் பாளையபட்டு மந்தையில் அமைக்கப்பட்ட மாத்தால் ஆன எல்லை கோட்டை நோக்கி சலை எருது மாடுகள் ஓடி வந்தது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் சேமங்களம் அய்யாசாமி மந்தை மாடு முதலாவதாக வந்து வெற்றி பெற்றது. 2 வதாக கரூர் மாவட்டம் மணச்சணம்பட்டி உடுமல் சீல்நாயக்கர் மந்தை மாடு வெற்றியின் எல்லை கோட்டை தாண்டியது. அப்போது இவர்களின் சமூக வழக்கப்படி 3 கன்னி பெண்கள் வைத்திருந்த மஞ்சள் பொடியினை வெற்றி பெற்ற சலை எருது மாடுகள் மீது தூவி வரவேற்று எலும்பிச்சை பழம் பரிசாக வழங்கப்பட்டது.

பின்னர் மஞ்சள் பொடி வைத்திருந்த 3 கன்னி பெண்களை எல்லை கோட்டிலிருந்து தேவராட்டத்துடன் சக்காளம்மன் கோயிலுக்கு அழைத்து வந்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். அதனை தொடர்ந்து மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெற்றது.இதில் முத்துப்பாலகிரி அரண்மனை கஸ்தூரி ரெங்க வசகப்பு நாயக்கர் பாளையபட்டு மந்தைக்கு உட்பட்ட கிராமமக்கள் மற்றும் திருச்சி, திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : jumping festival ,Telugupatti ,Thokaimalai , Thokaimalai : Pudukottai district at the evening jumping festival held in the Telungapatti of Khavalur panchayat near Thokaimalai.
× RELATED ஜூலை, ஆகஸ்ட் மாதம் நடவுக்கு ஏற்ற...