சாலை விதிகளை கடைபிடிக்க விழிப்புணர்வு வேலூரில் பழமையான கார்கள் அணிவகுப்பு-பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்

வேலூர் : சாலை விதிகளை கடைபிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வேலூரில் நேற்று பழமையான கார்களின் அணிவகுப்பு நடந்தது.76வது சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி, வேலூரில் நடந்த விழாவில், சாலை விதிகளை கடைபிடிக்க வலியுறுத்தி பழமையான கார்களின் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது.

ஊர்வலத்தில், தேசியக்கொடியுடன் 20க்கும் மேற்பட்ட பழமையான கார்களில், மது அருந்தி வாகனம் ஓட்டுவதை தவிர்த்தல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கும் வகையில் பதாகைகள் இடம் பிடித்திருந்தது. வேலூர் பாகாயத்தில் தொடங்கிய கார்களின் அணிவகுப்பு ஊர்வலம் தொரப்பாடி, கலெக்டர் பங்களா, முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, அண்ணா சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக கிரீன் சர்க்கிள் பகுதி வரை  சென்றது.

இந்த அணிவகுப்பு ஊர்வலத்தில், முன்னணி நிறுவனங்களின் பழைய மாடல் கார்கள் இடம் பெற்றன. இதனை பொதுமக்கள் ஆர்வத்தோடு பார்த்து, கார்கள் முன்பு நின்று செல்பி எடுத்து கொண்டனர். சிலர் அந்த கார்களை ஓட்டி பார்த்தும் மகிழ்ந்தனர். இதையொட்டி, பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

Related Stories: