சுதந்திர தின விடுமுறை எதிரொலி!: டாஸ்மாக் கடைகளில் குவிந்த கூட்டம்..ஆக.14ல் மட்டும் ரூ.273 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை.. மதுரை முதலிடம்..!!

சென்னை: டாஸ்மாக் கடைகளில் ஆகஸ்ட் 14ம் தேதி ஒரேநாளில் ரூ.273.92 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் மது பிரியர்கள் ஆகஸ்ட் 14ம் தேதியே மதுவை அதிகளவில் வாங்கியுள்ளனர். தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இக்கடைகளில் வார நாட்களில் ரூ.90 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை நடைபெறுவது வழக்கம். வார இறுதி நாட்களில் இந்த விற்பனை இரண்டு மடங்கு அதிகரிக்கும்.

பொதுவாக குடியரசுத் தினம், காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம், உழவர் திருநாள், திருவள்ளுவர் தினம, மே தினம் போன்ற முக்கிய நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். இதனிடையே, 75வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நேற்றைய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வழக்கம் போல் சுதந்திர தினத்தையொட்டி நேற்றும் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இருப்பினும் முன்னெச்சரிக்கையாக ஆகஸ்ட் 14ம் தேதியே குடிமகன்கள் தங்களுக்கு தேவையான மதுபானங்களை டாஸ்மாக் கடைகளில் இருந்து வாங்கி சென்றனர். இதனால் அன்றைய தினம் டாஸ்மாக் கடைகள் அதிகம் கூட்டம் காணப்பட்டது.

இந்நிலையில் ஆகஸ்ட் 14ம் தேதி விற்பனை செய்யப்பட்ட மதுபானங்களின் கணக்கை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில், மற்ற மண்டலங்களை விட மதுரை மண்டலத்தில் அதிக விற்பனை நடந்துள்ளது. மதுரை மண்டலத்தில் ரூ.58 கோடியே 26 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக, சென்னை மண்டலத்தில் ரூ.55 கோடியே 77 லட்சம், சேலம் மண்டலத்தில் ரூ.54 கோடியே 12 லட்சம் மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. திருச்சி மண்டலம் - ரூ.53.48 கோடி, கோவை மண்டலம் - ரூ.52.29 கோடிக்கு மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளன.

Related Stories: