நில மோசடி வழக்கில் ஆங் சான் சூகிக்கு மேலும் 6 ஆண்டுகள் சிறை..!!

நைப்பியிதோ: மியான்மர் நாட்டின் மக்கள் போராளியான ஆங் சான் சூகிக்கு நில ஊழல் வழக்குகளில் மேலும் கூடுதலாக 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்த நாட்டு ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மியான்மரின் மனித உரிமை போராளி என்று அறியப்படும் 77 வயதான ஆங் சான் சூகி கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு கொரோனா விதியை மீறியதாக 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தேச துரோக வழக்கில் 11 ஆண்டுகள் சிறை தண்டனை என மொத்தம் 15 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. 2015ல் தனது கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, அறக்கட்டளைக்கு கட்டணம் கட்டுவதற்கு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அரசு நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கினார் என்பது ராணுவம் தொடர்ந்த மற்றொரு வழக்கு.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி ஆங் சான் சூகிக்கு கூடுதலாக 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1962ம் ஆண்டு முதல் 50 ஆண்டுகள் ராணுவ ஆட்சி நடைபெற்ற மியான்மரில், ராணுவத்திற்கு எதிராக போராடிய ஆங் சான் சூகி, ஏற்கெனவே 21 ஆண்டுகள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் ஆவார். 2015ல் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்ததும் அங்கு தேர்தல் நடத்தப்பட்டது. அதில் அமோக வெற்றி பெற்று சூகியின் கட்சி ஆட்சி அமைத்தது. 2019ம் ஆண்டு நவம்பரில் நடத்தப்பட்ட தேர்தலில், மீண்டும் மிகப்பெரிய வெற்றியை சூகி பெற்றார். ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டிய ராணுவம் மக்களாட்சியை மீண்டும் கவிழ்த்ததோடு, சூகியை 2021ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி முதல் வீட்டுச் சிறையில் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.       

Related Stories: