×

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கையாக நீர் நிலைகள், 16 கால்வாய்களில் தூர்வாரும் பணி நடைபெறுகிறது; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 200 கிலோ மீட்டர் நீளத்தில் உள்ள நீர் நிலைகள், 16 கால்வாய்களை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது, என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ராமாபுரத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் மழைநீர் கால்வாய் கட்டும் பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சென்னையில் வடகிழக்கு பருவ மழையின்பொது கடந்த ஆண்டு ஏற்பட்ட பாதிப்பு போல இந்த ஆண்டு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக பல்வேறு துறைகள் இணைந்து மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக, வளசரவாக்கம் பகுதியில் மழை பெய்யும் போது தண்ணீர் வெளியேற வழியின்றி வீடுகளுக்குள் புகும் நிலை உள்ளது. வளசரவாக்கத்தில் இருந்து ராமாபுரம் வழியாக அடையாறு ஆற்றை இணைக்கும் கால்வாய் ஒன்று 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்த பகுதியில் உள்ள மக்கள் மழைக்காலத்தில் பாதிக்கப்படுவது தடுக்கப்படும். சென்னை மாநகராட்சி, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட 3 துறைகள் இணைந்து மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள நீர் நிலைகள், 16 கால்வாய்களை தூர்வாரும் பணி 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு தற்போது நடைபெற்று வருகிறது.  மேலும், 1,050 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணியும் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் எல்லாம் நிறைவு பெற்றால் சென்னையில் பருவ மழை காலத்தில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்காமல், உடனுக்குடன் வெளியேறும். முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரின் பேச்சு என்பது அநாகரிகமாக இருக்கும் என்பதை அனைவரும் அறிவார்கள். அவரின் பேச்சுகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை.

 கடந்த 9 ஆண்டுகளில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்த எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள், என்று அவருக்கு தைரியம் இருந்தால் தெரிவிக்கட்டும். திமுக ஆட்சி அமைந்த கடந்த 15 மாதங்களில் அதைவிட நாங்கள் அதிகமான வழக்கு பதிவு செய்து, கஞ்சா, போதை பொருட்களை பறிமுதல் செய்திருக்கிறோம். அதை விற்பனை செய்தவர்களை கைது செய்து இருக்கிறோம். இதுகுறித்து அறிக்கையும் வெளியிட்டிருக்கிறோம். தான் வெளியிட்ட அறிக்கையில் தவறு இருந்தால் அவரே அதிமுக ஆட்சியில் கைப்பற்றப்பட்ட விவரம் குறித்து தகவல் தெரிவிக்கட்டும். தமிழகத்தில் கஞ்சா உற்பத்தி 100% தடை செய்யப்பட்டுள்ளது, என காவல்துறை தெரிவிக்கிறது.

ஆனால், தமிழகத்திற்கு வரும் கஞ்சா குறித்து ஆய்வு செய்த போது, ஆந்திரா, கேரளா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து வருவது உறுதி செய்யப்பட்டது. அதிலும் ஆந்திராவில் இருந்தே அதிகம் தமிழகத்திற்கு கடத்தி வருவதை உறுதி செய்து, ஆந்திராவிற்கு சென்று ஆய்வு செய்தனர். இதன்மூலம், 6,500 ஏக்கரில் கஞ்சா உற்பத்தி செய்யப்படுவதை கண்டறிந்து ஆந்திர அரசுக்கு தெரிவித்தோம். உடனடியாக அதனை ஆந்திர அரசு அழித்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.4 ஆயிரம் கோடி. இதுபோன்ற செயல் அதிமுக ஆட்சியில் செய்யப்பட்டுள்ளதா. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Chennai ,Minister ,Ma. Subramanian , Dredging of water levels and 16 canals is underway in Chennai as a precaution against monsoon; Information from Minister M. Subramanian
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...