×

பக்கிங்காம் கால்வாய் கரையில் அமைந்துள்ள பூங்காவிற்கு சுதந்திர திருநாள், அமுத பெருவிழா பூங்கா என பெயர் பலகை திறப்பு; முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு மரக்கன்று நட்டு வைத்தார்

சென்னை:‘சுதந்திர திருநாள் அமுத பெருவிழா பூங்கா என்று பெயர் சூட்டப்பட்ட பூங்காவின் பெயர் பலகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, மரக்கன்றை நட்டு வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: சென்னை, கஸ்தூரிபாய் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையம் முதல் திருவான்மியூர் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையம் வரை பக்கிங்ஹாம் கால்வாய் கரையில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவிற்கு, 75வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில் “சுதந்திர திருநாள் அமுத பெருவிழா பூங்கா”என்று பெயர் சூட்டப்பட்ட பூங்காவின் பெயர் பலகையை திறந்து வைத்து, பூங்காவினை முதல்வர் பார்வையிட்டார்.

தமிழ்நாடு நகர்புறசாலை உட்கட்டமைப்பு நிதியிலிருந்த ரூ.18.71 கோடி செலவில் கஸ்தூரிபாய் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையம் முதல் திருவான்மியூர் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையம் வரை பக்கிங்ஹாம் கால்வாய் கரையில் அடர்வன காடுகள், நடைபாதை, மிதிவண்டிப் பாதை மற்றும் சுற்றுப்புறத்தை மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பூங்காவின் மொத்த நீளம் 2.1 கி.மீ. ஆகும். இப்பூங்கா முதல்வரால் கடந்த மே 12ம் ேததி திறந்து வைக்கப்பட்டது. இப்பூங்காவில், நடைபாதை, மிதிவண்டிப் பாதை, அடர்வன காடு, சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்கள், பாரம்பரிய மரங்கள், பூந்தொட்டிகள், எல்.ஈ.டி விளக்குகள், சுவர் ஓவியங்கள், கலை நயமிக்க சிலைகள், செயற்கை நீரூற்று, ஊட்டச்சத்து தோட்டம், இறகு பந்து மைதானம் போன்ற சிறப்பான வசதிகள் உள்ளன.  

முதல்வர் சுதந்திர திருநாள் அமுத பெருவிழா பூங்கா”என்று பெயர் சூட்டப்பட்ட இப்பூங்காவின் பெயர் பலகையை திறந்து வைத்து, மரக்கன்றை நட்டு வைத்தார். மேலும், சிறுவர்களின் சிலம்பாட்ட பயிற்சிகளையும், திறந்தவெளி உடற்பயிற்சி பகுதியையும், கலை நிகழ்ச்சிகள் நடக்கும் பகுதியையும், ஸ்கேட்டிங் பயிற்சி பகுதியையும் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, பொன்முடி, எ.வ. வேலு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் ஜே.எம்.எச்.ஹசன் மௌலானா, துணை மேயர் மகேஷ் கமார், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன்,  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Buckingham Canal ,Freedom Thirunal ,Amuta Peruvizha Park ,Chief Minister ,M. K. Stalin , Inauguration of the name board for the park located on the banks of the Buckingham Canal as Freedom Thirunal, Amuta Peruvizha Park; Chief Minister M. K. Stalin visited and planted a sapling
× RELATED வேளச்சேரி ஏரியில் இருந்து உபரி நீர்...