×

அசாம் முதல்வர் அறிவிப்பு: 1 லட்சம் வழக்குகள் வாபஸ் பெறப்படும்

கவுகாத்தி: நீதித்துறையின் சுமையை குறைக்கும் வகையில், சர்ச்சைக்குரிய சமூக வலைதள பதிவுகள் உட்பட 1 லட்சம் சிறு வழக்குகள் வாபஸ் பெறப்படும் என அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது சுதந்திர தின உரையில் அறிவித்தார்.

அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெற்ற 76வது சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசிய அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ‘‘அசாம் நீதித்துறையில் சுமார் 4 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், சர்ச்சைக்குரிய சமூக வலைதள பதிவுகள் உட்பட 1 லட்சம் சிறு வழக்குகள் வாபஸ் பெறப்படும். இது, பலாத்காரம், கொலைகள் போன்ற கொடூரமான குற்றங்களில் நீதித்துறை கவனம் செலுத்த உதவும். அசாம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இறையாண்மை என்பதை பேரம் பேச முடியாது. அசாம் ஒருபோதும் இந்தியாவை விட்டு வெளியேறாது. கடந்த 3 நாட்களாக தேசியக் கொடியின் மீது மக்கள் காட்டிய அன்பு, அசாம் எப்போதும் இந்தியாவுடன் இருப்பதை நிரூபிக்கிறது’’ என்றார்.

முன்னாதாக, அசாமியில் தடை செய்யப்பட்ட சில கிளர்ச்சி அமைப்புகள் முழு வேலை நிறுத்தம் மற்றும் சுதந்திர தின புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன. இதனால் பலத்த பாதுகாப்புடன் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில், முதல்வர் ஹிமந்தா இவ்வாறு பேசியது குறிப்பிடத்தக்கது.


Tags : Assam CM , Assam CM announcement: 1 lakh cases to be withdrawn
× RELATED இனியும் பாஜகவின் கூற்றுகளை மக்கள்...