ஊரக வளர்ச்சித்துறை பட்டியல் தயாரிப்பு: 99 ஓவர்சியர்களுக்கு இளநிலை பொறியாளர் பதவி

நெல்லை: தமிழகத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் ஓவர்சியர்கள், இளநிலை வரைதொழில் அலுவலர்கள் 99 பேருக்கு இளநிலை பொறியாளர் பதவி உயர்வு அளிக்க ஊரக வளர்ச்சித் துறை பட்டியல் தயாரித்துள்ளது. தமிழகத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் ஒவ்வொரு வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் பணி மேற்பார்வையாளர்கள் (ஓவர்சியர்கள்), இளநிலை வரைதொழில் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களது வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் மூலம் கிராம பஞ்சாயத்துகளில் மேற்கொள்ளப்படும் அரசு திட்டப் பணிகள், கட்டுமானப் பணிகள், கட்டுமானப் பணிகளின் தரம், குறித்த காலத்தில் பணிகள் நடக்கிறதா என ஆய்வு செய்து பிடிஓவிற்கும், பொறியியல் பிரிவிற்கும் அவ்வப்போது அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்நிலையில் தமிழகத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் ஓவர்சியர்கள், வரை தொழில் அலுவலர்கள் 99 பேருக்கு இளநிலை பொறியாளர்களாக பதவி உயர்வு அளிக்க ஊரக வளர்ச்சித் துறையால் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.  இதற்காக இவர்களின் பணிக் காலம் குறித்த அறிக்கையை மாவட்ட கலெக்டர்கள் அனுப்புமாறு ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் தர்வேஸ் அகமது கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி, பதவி உயர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ள ஓவர்சியர்கள், வரைதொழில் அலுவலர்களுக்கு அளிக்கப்பட்ட பணிக் காலத்தில் அளிக்கப்பட்ட மெமோ, நடவடிக்கைகள், தற்காலிக பணி நீக்கம், நடவடிக்கைகள் ரத்து குறித்த அறிக்கைகள், சொந்த கிராமம், வட்டாரம், மாவட்டம், ஓய்வு பெறும் தேதி உள்ளிட்ட விவரங்களை அனுப்ப வேண்டும். மேலும் பதவி உயர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ள அலுவலர்கள் அனைவரின் பணிப் பதிவேடு, பணிப்பதிவேட்டில் இடம்பெற்றுள்ள பக்கங்களின் எண்ணிக்கையைும் குறிப்பிட வேண்டும்.

பதவி உயர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ள ஓவர்சியர்கள், இளநிலை வரைதொழில் அலுவலர்கள் பிஇ (சிவில்) பட்டம் பெற்றிருப்பின் அவர்கள் உதவி பொறியாளர் பதவி உயர்வு கோரக் கூடாது என்ற கடிதமும் அவர்களிடம் பெற வேண்டும். அவர்கள் இளநிலை பொறியாளர் பதவி உயர்வுக்கு தான் பரிசீலிக்கப்படுவர். இந்த கடிதத்தையும் பட்டியலுடன் சேர்த்து அனுப்ப வேண்டும் என ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் தர்வேஸ் அகமது மாவட்ட கலெக்டர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: