×

கவர்னர் விருந்து புறக்கணிப்பு, பாஜ மீது கடும் அதிருப்தியில் எடப்பாடி பழனிசாமி; ஓபிஎஸ்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் கூட்டணியில் இருந்து வெளியேற திட்டம்?

சென்னை: தொண்டர்கள் பலம் இல்லாத ஓ.பன்னீர்செல்வத்துக்கு தொடர்ந்து பாஜ முக்கியத்துவம் கொடுப்பதால், கோபத்தில் கவர்னர் அளித்த விருந்தை எடப்பாடி பழனிசாமி நேற்று புறக்கணித்ததாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், நீதிமன்றத்தில் அதிமுக கட்சி விவகாரம் தனக்கு சாதகமாக வரும் வரை பொறுத்திருந்து, கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுக்கலாம் என ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில், சுதந்திர தின விழாவையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து அளித்தார். இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ், தமாகா ஆகிய கட்சிகளோடு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பங்கேற்றார். ஆனால், இந்த விழாவில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் கலந்துகொள்ளவில்லை.
அவர், சென்னையில் இருந்தும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இதற்காக, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி விருந்துக்கு ஏற்பாடு செய்தார். ஆனால், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் கவர்னர் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கூறி, இந்த விருந்தை தமிழக அரசு புறக்கணித்தது. விருந்தில், எடப்பாடி பழனிசாமி வேண்டும் என்றே கலந்துகொண்டார். ஆனால், இந்த விருந்தை அவர் புறக்கணித்துள்ளார். அவரது அரசியல் எதிரணியைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். இதற்கு முக்கிய காரணம், கடந்த சில நாட்களாக பாஜ மீது எடப்பாடி பழனிசாமி கடும் அதிருப்தியில் உள்ளாராம்.

ஜனாதிபதி தேர்தல் நடந்தபோது, பாஜ வேட்பாளர் திரவுபதி முர்மு வேட்பு மனு தாக்கலுக்கு ஓ.பன்னீர்செல்வத்தையும், எடப்பாடி பழனிசாமியையும் மோடி அழைத்திருந்தார். ஆனால் பன்னீர்செல்வம் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டதால், எடப்பாடி கலந்துகொள்ளவில்லை. தனது சார்பில் தம்பிதுரையை அனுப்பி வைத்தார். அதேநேரத்தில் பதவி முடிந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு வழியனுப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இதற்காக, 5 நாட்கள் டெல்லியில் முகாமிட திட்டமிட்டிருந்தார். விழாவில், அண்ணாமலை அருகில் எடப்பாடி பழனிசாமி அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த மோடி, அண்ணாமலையிடம் பேசியவர், எடப்பாடி பழனிசாமிக்கு வணக்கம் செலுத்தியதோடு கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார். எனவே, மோடி மற்றும் அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி நேரம் கேட்டார். ஆனால் இருவரும் நேரம் ஒதுக்கவில்லை. அண்ணாமலை மூலம் நேரம் கேட்டும் கிடைக்கவில்லை. மேற்கு மண்டலத்தில் குறிப்பாக கொங்கு பகுதியில் இரு தலைவர்கள் உருவாவதை அண்ணாமலை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால்தான் மோடி, அமித்ஷாவிடம் நேரம் வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக எடப்பாடி பழனிசாமி, தனது ஆதரவாளர்களிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் டெல்லி பயணத்தை பாதியிலேயே எடப்பாடி ரத்து செய்து விட்டு சென்னை திரும்பி விட்டார். அதேநேரத்தில் ராம்நாத் கோவிந்த் வழியனுப்பு விழாவில், ஓ.பன்னீர்செல்வம், கொரோனா தொற்று காரணமாக பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டது. மேலும், செஸ் போட்டியை தொடங்கி வைக்க மோடி சென்னை வந்தபோது அவரை வரவேற்க எடப்பாடி பழனிசாமிக்கும், வழியனுப்பி வைக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், இருவரும் தனித்தனியாக சந்திக்க அனுமதி கேட்டபோது மோடி மறுத்து விட்டார். இதனால் ஆட்சியில் இருந்தபோது புதுப்பெண்ணை பார்க்க வருவதுபோல, விரும்பி விரும்பி வந்த பாஜ தற்போது தன்னை திட்டமிட்டு புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிசாமி கருதுவதாகவும் கூறப்படுகிறது.

எனவே, பாஜ மீது எடப்பாடி பழனிசாமி கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தேநீர் விருந்தில் தமிழக முதல்வர் மேடையில் அமர்ந்திருந்தார். அமைச்சர்களுக்கு தனியாக இருக்கை போடப்பட்டிருந்தது. அரசியல் கட்சியினர் மற்றும் பாஜவினர் என்று பாஜவுக்கு மட்டும் தனி இருக்கைகள் போடப்பட்டிருந்தன. எதிர்க்கட்சித் தலைவர் என தனியாக இருக்கை போடப்படவில்லை. இந்த விழாவில் பாஜவுக்கு அளிக்கும் முக்கியத்துவம் தனக்கு அளிக்கப்படவில்லை. ஓ.பன்னீர்செல்வத்தையும் தன்னையும் ஒன்றாக கருதுகின்றனர் என்று எடப்பாடி பழனிசாமி சந்தேகப்பட்டார். இதனால் கவர்னர் அளித்த தேநீர் விருந்தை சென்னையில் இருந்து கொண்டே புறக்கணிப்பது என்று முடிவு செய்துள்ளார். இதுகுறித்து மூத்த தலைவர்களிடமும் அவர் ஆலோசனை நடத்திய பிறகே இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் தன்னை தொடர்ந்து புறக்கணிக்கும் பாஜவை எச்சரிக்கும் வகையிலேயே இந்த முடிவை அவர் எடுத்துள்ளாராம். அதேநேரத்தில், அதிமுக உட்கட்சி பிரச்னை குறித்து வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. நீதிமன்றத்தில் தனக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும்வரை அமைதியாக இருப்பது. தனக்கு எதிராக தீர்ப்பு அமையும் பட்சத்திலோ, அல்லது தனக்கு சாதகமாக தீர்ப்பு வந்தாலோ பாஜவுக்கு எதிராக அதிரடி முடிவுகளை எடப்பாடி பழனிசாமி எடுப்பார் என்று கூறப்படுகிறது. இதனால் விரைவில் தமிழக அரசியலில் அடுத்த அதிரடி ஆரம்பமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Edappadi Palaniswami ,BJP ,Governor , Edappadi Palaniswami in deep displeasure with BJP for boycotting Governor's party; Plan to pull out of alliance due to emphasis on OPS?
× RELATED எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக...