×

2022 ஏப்ரல் - ஜூலை ஆகிய 4 மாதங்களில் நேரடி வரி வருவாய் 40% உயர்வு: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: 2022 ஏப்ரல் - ஜூலை ஆகிய 4 மாதங்களில் ஒன்றிய அரசின் நேரடி வரி வருவாய் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, நடப்பு நிதி ஆண்டின் முதல் 4 மாதங்களில் ரூ.5 லட்சம் கோடியாக நேரடி வரி வருவாய் அதிகரித்துள்ளதாக அரசு கூறியுள்ளது. 2022-23ம் ஆண்டுக்கான நேரடி வரி வசூல் இலக்கான ரூ.14.2 லட்சம் கோடியில் ரூ.5 லட்சம் கோடி என்பது 35 சதவீதம் ஆகும்.

தனிநபர் வருமான வரி வருவாய் 2022 ஏப்ரல் - ஜூலையில் 52 சதவீதம் உயர்ந்து ரூ.2.67 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதேபோல், நிறுவனங்களின் லாபம் மீதான வரி மூலமாக வருமானம் ஏப்ரல் - ஜூலையில் 32 சதவீதம் உயர்ந்து ரூ.2.2 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. கூடுதலாக செலுத்தப்பட்ட வருமான வரியில் ரூ.67,000 கோடி திருப்பி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

நேரடி வரி என்றால் என்ன?

தனி மனிதர்களோ அல்லது நிறுவனங்களோ அரசுக்கு நேரடியாக செலுத்துகின்ற பெருநிறுவன வருமான வரி, தனிநபர் வருமான வரி, சொத்து வரி போன்றவை நேரடி வரிகள் ஆகும். இதில், நேரடி வரிகளை மற்றவர்கள் மீது மாற்றவோ சுமத்தவோ முடியாது. உதாரணமாக, ஒருவரின் வருமானம் அதிகமாகும்போது அவர் அதிகமான நேர்முக வரிகளையும், வருமானம் குறைவாக உள்ளவர்கள் குறைவான வரிகளையும் செலுத்துவார்கள். அதாவது, நேரடி வரிகள் ஒருவரின் செலுத்தும் திறனுக்கேற்றவாறு மாறுபடும்.

Tags : Union Government Information , 2022 April, July, Direct Tax Revenue, Union Govt
× RELATED நீதிபதிகள் சொத்து விவரத்தை...