மக்களை கவர முயற்சி: வருமான வரி விலக்கு, கழிவுகள் பெறும் முறை ரத்தாகிறது..வரிவிலக்கு இல்லாத வருமானவரி திட்டத்தை நிரந்தரமாக்க ஒன்றிய அரசு முடிவு..!!

டெல்லி: வருமான வரி விலக்குகள், கழிவுகள் இல்லாத வரி திட்டத்தை மக்களை மேலும் கவரும் வகையில் மாற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. வரிவிலக்கு பெறும் முறை நாளடைவில் ரத்தாகிறது. 2020-21ம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துவதில் இருவிதமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஒன்று வரிவிலக்கு, வரி கழிவுகளுடன் கூடிய பழைய திட்டம். மற்றொன்று வரிவிலக்கு மற்றும் கழிவுகள் இல்லாமல் வரி விகிதம் குறைக்கப்பட்ட திட்டம்.

இந்த இரண்டில் எந்த திட்டத்தையும் வரி செலுத்துவோர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. வரி விலக்குகள், கழிவுகள் அல்லாத புதிய வருமான வரி திட்டத்தை ஒன்றிய நிதி அமைச்சகம் விரைவில் மறு ஆய்வு செய்யவுள்ளது. அந்த திட்டத்தை வரி செலுத்தும் தனி நபர்களை மேலும் கவரக்கூடிய வகையில் சிறப்பாக மாற்றும் நோக்கத்தில் மறு ஆய்வு செய்கிறது.

வீட்டுக்கடன், கல்விக்கடன் ஆகியவற்றை செலுத்தி முடித்தவர்களுக்கு வரிவிலக்கு பெற எதுவும் இருக்காது என்பதால் அவர்கள் புதிய வருமானவரி திட்டத்துக்கு மாற விரும்புவதால் வரி விகிதத்தை இன்னும் குறைப்பதன் மூலம் இந்த திட்டம் மக்களை மேலும் கவரும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. நாளடைவில் வரிவிலக்கு இல்லாத புதிய வருமானவரி திட்டத்தை நிரந்தரமாக்குவதும், வரி விலக்கு, கழிவுகள் கொண்ட பழைய திட்டத்தை ரத்து செய்வதும் தான் ஒன்றிய அரசின் நோக்கம் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: